/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தாமிரபரணியை சுரண்டி கொள்ளைலாபம் மலைபோல் குவிக்கப்பட்ட "பதுக்கல் மணல்'தாமிரபரணியை சுரண்டி கொள்ளைலாபம் மலைபோல் குவிக்கப்பட்ட "பதுக்கல் மணல்'
தாமிரபரணியை சுரண்டி கொள்ளைலாபம் மலைபோல் குவிக்கப்பட்ட "பதுக்கல் மணல்'
தாமிரபரணியை சுரண்டி கொள்ளைலாபம் மலைபோல் குவிக்கப்பட்ட "பதுக்கல் மணல்'
தாமிரபரணியை சுரண்டி கொள்ளைலாபம் மலைபோல் குவிக்கப்பட்ட "பதுக்கல் மணல்'
ADDED : செப் 27, 2011 12:42 AM
வள்ளியூர் அருகே மழை காலங்களில் கொள்ளை லாபத்தில் விற்பனை செய்வதற்காக 'பதுக்கல் மணல்' மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறது.வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதனால் தாமிரபரணி ஆற்றில் மணல் குவாரிகள் செயல்படவில்லை. விளாத்திக்குளம், சீவலப்பேரி சிற்றாறு ஆகிய பகுதிகளில் மட்டுமே அரசு குவாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது.ஆனாலும் தேவையான அளவிற்கு மணல் 'சப்ளை' இல்லை. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டுமான தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. மணலின் தேவை அதிகமானதால் மணல் தேவைப்படுவோர், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழித்து விரைவில் கட்டட பணிகளை முடிக்க நினைப்பவர்கள் 'அதிக விலைக்கு' மணலை வாங்கி கட்டட வேலைகளை முடிக்க நினைக்கிறார்கள்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புரோக்கர்கள் சிலர் 'கொள்ளை' லாபம் சம்பாதிப்பதற்கு தடையையும் மீறி இரவு நேரங்களில் ஆற்றங்கரையோர கிராமங்களில் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
டிராக்டர், மாட்டு வண்டியில் மணல் அள்ளப்பட்டு ஏதாவது ஓரிடத்தில் குவித்து வைக்கப்படுகிறது. பின்னர் இரவு நேரங்களில் கொண்டு செல்லவேண்டிய இடத்திற்கு பாதுகாப்போடு மணல் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு லோடு மணல் சுமார் 8 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.இந்நிலையில் நாகர்கோவில் பைபாஸ் ரோட்டில் தெற்கு வள்ளியூர் விலக்கு பகுதியில் தனியார் இடத்தில் சுமார் ஒரு லட்சம் யூனிட்டிற்கும் மேல் மலைபோல் ஆற்று மணல் குவிக்கப்பட்டு இருக்கிறது. இதை அந்த வழியாக பஸ்,லாரி, கார்களில் செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்த போது,''தினமும் லாரி,லாரியாக மணல் கொண்டு வரப்பட்டு மொத்தமாக சேகரிக்கப்பட்டு வருகிறது. வெளியூர் ஆட்களை வைத்து மணல் பாதுகாக்கப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் விலைக்கு மணல் கேட்டால், விற்பனைக்கு கிடையாது என கூறப்படுகிறது. தற்போது மழை சீசன் துவங்கவுள்ளது. அப்போது ஆற்றங்கரையோர பகுதிகள் மற்றும் குவாரிகளில் மணல் அள்ளுவது நிறுத்தப்படும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.'' என்றனர். அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,''தனியார் ஒருவர் அதிகமான அளவில் மணல் தேக்கி வைத்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மணல் பதுக்கலில் ஈடுபடுவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.''என்றார்.தங்கத்திற்கு நிகராக கருதப்படும் மணலின் தேவையும், விலையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே 'மணல் பதுக்கலில்' ஈடுபடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நமது சிறப்பு நிருபர்