/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வழியில்லை: எந்த நேரமும் செயல்படும் ஸ்கேன் வசதி தேவைஅரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வழியில்லை: எந்த நேரமும் செயல்படும் ஸ்கேன் வசதி தேவை
அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வழியில்லை: எந்த நேரமும் செயல்படும் ஸ்கேன் வசதி தேவை
அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வழியில்லை: எந்த நேரமும் செயல்படும் ஸ்கேன் வசதி தேவை
அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வழியில்லை: எந்த நேரமும் செயல்படும் ஸ்கேன் வசதி தேவை
ADDED : ஜூலை 13, 2011 12:58 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறப்பாக செயல்பட கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான ஊழியர்கள் சம்பளம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி முண்டியம்பாக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது. மொத்தம் 150 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் மருத்துவமனை திறக்கப்பட்டதால் மாவட்டத்திலுள்ள மக்கள் இனி சென்னை, புதுச்சேரி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அதற்குரிய சாதனங்களை மருத்துவமனையில் இதுநாள் வரை பொருத்தப்படவில்லை. விபத்தில் அடிபட்டு அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அனைவரும் மேல்சிகிச்சை என்ற பெயரில் புதுச்சேரி, சென்னை போன்ற இடங்களுக்கு திருப்பி அனுப்பும் நிலை நீடித்து வருகிறது. இங்கு உரிய நேரத்தில் சிகிச்சை இன்றி பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. விபத்தில் தலையில் அடிபட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஸ்கேன் வசதி இல்லாததால் உடனடியாக எதுவும் செய்ய முடிவதில்லை. இதுபோன்ற பலரும் உடனடியாக மேல்சிகிச்சைக்காக திருப்பி அனுப்பி விடுகின்றனர். பல மாதங்களாக இங்கு மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை தள்ளி போடப்பட்டது. சமீப காலத்தில் மருந்து வாங்கியதால் தற்போது அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. போதுமான அளவிற்கு மருந்துகளை வாங்கி வைப்பதில்லை என்ற காரணத்திற்காக நோயாளிகளை மேல்சிகிச்சைக்கு அனுப்பி விடுகின்றனர். மேலும் ஐ.சி.யு., யூனிட்டில் மருத்துவமனை திறந்த போது வாங்கப்பட்ட சிறப்பு படுக்கைகள் மருந்துவமனை திறந்து ஒரே ஆண்டில் பழுதாகிவிட்டன. பெரும்பாலான படுக்கை சாதனங்கள் பயனற்று உள்ளது. நோயாளிகளுக்கு அடிப்படை தேவையான குடி நீர், கழிவறை வசதி முற்றிலும் இல்லை. மருத்துவமனை வளாகத்தில் இருந்த குடிநீர் சுத்திகரிப்பு மெஷின் பழுடைந்துள்ளதால் பொதுமக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். அதே போல் உள்நோயாளிகளுக்கு கழிவறை வசதிகள் இருந்தாலும், புறநோயாளிகளாக வருகின்றவர்கள் கழிவறை வசதியின்றி அவதிப்படும் நிலை உள்ளது. கட்டண கழிவறை கட்டி முடிக்கப்பட்டும், திறந்து வைக்காமல் மூடியே கிடக்கின்றது. மருத்துவமனையில் நீராவி முறையில் சமையல், நீராவி சலவையகம் போன்ற வசதிகளுக்காக சாதனங்கள் பொருத்தப்பட்டது. இதற்கான பாய்லர் இதுவரை பொருத்தாததால் நீராவி முறை செயல்பாடுகள் முடங்கிபோய் உள்ளது. மருத்துவ கழிவுகளை மருத்துவமனையின் பின்புறம் பள்ளம் எடுத்து கொட்டாததால் கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்பட்டு, காற்றில் பறந்து நோய் பரப்பும் வகையில் உள்ளது. பிணவறையில் அமைக்கப்பட்டுள்ள குளிர் சாதனங்கள் பழுதாகி மீண்டும் சீரமைக்காததால் துர்நாற்றம் வீசும் பகுதியாக மாறியுள்ளது. மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டருக்கு தேவையான டீசல் இல்லாததால் மின் விநியோகம் இல்லாத சமயத்தில் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
தற்போது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான டாக்டர்கள், நர்சுகள், வார்டு பாய்கள் என 80 சதவிகித அளவிற்கு ஊழியர்கள் உள்ளனர். டாக்டர்கள் நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளித்தாலும் போதுமான சாதன வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலக பைல்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் பொருத்தப்பட்டு தரம் மேலும் உயரும். இங்கு பணி புரியும் ஊழியர்கள் சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் போதுமான சாதனங்களை பொருத்தி தரமான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப் பிரச்னையில் உள்ளூர் அமைச்சர் சண்முகம் கவனம் செலுத்த வேண்டும்.
ஈகோ பிரச்னையால் பைல்கள் தேக்கம்மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து டீன் அலுவலகத்திற்கு செல்லும் பைல்கள் கிடப்பில் போடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் , ஊழியர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. அதே போன்று புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் சம்பளம் குறித்து அரசுக்கு தெரிவித்து அப்ரூவல் பெறாததாலும், கரூவூலகத்திற்கு பணியாளர்கள் சம்பளம் குறித்த தகவல் அனுப்பாததாலும் சம்பள கிடைக்காமல் பெரும்பாலான ஊழியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவ கண்காணிப்பாளருக்கும், டீனுக்கும் இடையே சுமூகமான சூழ்நிலை இல்லாததால் அரசுக்கு அனுப்ப வேண்டிய பைல்கள் அனைத்தும் முடங்கிபோய் உள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.