Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பாடாவதி ஜீப் பராமரிக்க நிதி ஒதுக்கீடு நகராட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு

பாடாவதி ஜீப் பராமரிக்க நிதி ஒதுக்கீடு நகராட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு

பாடாவதி ஜீப் பராமரிக்க நிதி ஒதுக்கீடு நகராட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு

பாடாவதி ஜீப் பராமரிக்க நிதி ஒதுக்கீடு நகராட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு

ADDED : ஆக 01, 2011 04:13 AM


Google News
ஆத்தூர்: ஆத்தூர் நகராட்சியில், ஐந்து ஆண்டுக்கு முன், பயன்படாத நிலையில் ஓரம் கட்டப்பட்ட பாடாவதி ஜீப்பை பராமரிக்க, தற்போது, 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆத்தூர் முதல்நிலை நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. அப்பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு செய்தல், வரி வசூல் கண்காணிப்பு, குடிநீர் விநியோகம், சுகாதாரம் மற்றும் துப்பரவு பணிகளை பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளை, நகராட்சி கமிஷனர் மேற்கொள்கிறார்.எனவே, அவருக்கு நகராட்சி சார்பில் ஜீப் வழங்கப்பட்டது. கடந்த, 1995ம் ஆண்டு, அப்போதைய நகராட்சி கமிஷனரின் பயன்பாட்டுக்காக ஜீப்(டி.என்-27, யூ-0355) வழங்கப்பட்டது. 10 ஆண்டுகள் உழைத்த ஜீப் கடந்த, 2006ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி, பயன்படாத நிலையில் ஓரம் கட்டப்பட்டது.கடந்த ஐந்து ஆண்டுகளாக, நகராட்சி அலுவலக வளாகத்தின் பின்புறத்தில் எவ்வித பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. துருப்பிடித்து உருக்குலைந்து வீணாகி வரும் அந்த ஜீப்பை பராமரிக்க தற்போது, 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த நகராட்சி கவுன்சில் கூட்டத்தில், 55வது பொருளாக கொண்டுவரப்பட்டு, காயலான் கடை ஜீப்பை பராமரிக்க, 70 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கும் தீர்மானத்துக்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.ஐந்தாண்டுக்கு முன்பே பயன்படுத்த முடியாது என, அப்போதைய நகராட்சி நிர்வாகத்தால் ஓரம் கட்டப்பட்ட ஜீப்புக்கு, தற்போது பராமரிப்பு செய்வதற்காக, 70 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நகராட்சி கமிஷனர் மற்றும் தலைமை இன்ஜினியர் தனித்தனியே ஆய்வு பணிகள் மேற்கொள்வதற்கு வாகனம் இல்லாததால், பயன்பாடின்றி கிடக்கும் ஜீப்பை பராமரிப்பதாக, நகராட்சி கவுன்சில் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி சேர்மன் பூங்கொடி பதவி வகித்து வரும் ஆத்தூர் நகராட்சியில், தி.மு.க., கவுன்சிலர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்தும், காயலான் கடை ஜீப்பை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்த விவகாரம், ஆத்தூர் பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ஆத்தூர் நகராட்சி அலுவலர்கள் சிலர் கூறியதாவது:ஆத்தூர் நகராட்சி கமிஷனரின் அலுவலக உபயோகத்துக்கு வாங்கப்பட்ட ஜீப், 10 ஆண்டுகளில், 2 லட்சத்து 76 ஆயிரம் கி.மீ., இயக்கப்பட்டு, 2006ம் ஆண்டில் பயன்படுத்தாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.ஆத்தூர் நகராட்சி, தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், ஆய்வுக் கூட்டம், திட்டப்பணிகள், குடிநீர் பணிகள் மற்றும் நகராட்சியின் அன்றாட பணிகளை ஆய்வு செய்ய கமிஷனர் மற்றும் நகராட்சி தலைமை இன்ஜினியருக்கு தனித்தனியே வாகனம் தேவைப்படுகிறது. அதனால் பழைய ஜீப்பை, 70 ஆயிரம் ரூபாயில் பராமரிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us