18 லட்சம் ஓடாத மீட்டர்களால் மின்துறைக்கு ரூ.700 கோடி இழப்பு
18 லட்சம் ஓடாத மீட்டர்களால் மின்துறைக்கு ரூ.700 கோடி இழப்பு
18 லட்சம் ஓடாத மீட்டர்களால் மின்துறைக்கு ரூ.700 கோடி இழப்பு

தமிழக மின்வாரியத்தில், பழைய கறுப்பு மீட்டர் பெட்டிகளை மாற்றாததால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்துறை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அனைத்து மின் நுகர்வோர்களுக்கும், கறுப்பு வண்ண இரும்புப் பெட்டி போன்ற மெக்கானிக்கல் மீட்டர்கள் வழங்கப்பட்டன.
தற்போது, மின்வாரிய சேர்மன் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மின்பகிர்மான வட்டங்களிலும் கறுப்பு மீட்டர் பெட்டிகளை, தொழில்நுட்பக் கருவிகள் மேலாண்மைப் பிரிவு கணக்கெடுத்தது. இதில், 150 வட்டங்களில், சராசரியாக 10 ஆயிரம் மீட்டர்கள் வீதம், 18 லட்சம் மெக்கானிக்கல் மீட்டர்கள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் வரை மின்துறைக்கு இழப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், புதிதாக இணைப்பு பெற்ற நுகர்வோர்களுக்கும், பழுதான மீட்டர்களை மாற்றவும், 50 ஆயிரம் மீட்டர்கள் தேவைப்படுகின்றன. இதுகுறித்து, மின்துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, 'வீடுகளுக்கான இணைப்புகளுக்கு தேவையான மீட்டர்கள், 'ஸ்டாக்' உள்ளன. மும்முனை இணைப்புகளுக்கு தான் பற்றாக்குறை உள்ளது. தற்போது, 15 லட்சம் மீட்டர்கள் தேவை' என்றார். ஆனால், புதிய மீட்டர்கள் வாங்குவதில், கோர்ட் வழக்குகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழக்குகள் முடிந்தால் தான், மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை மின்வாரியம் அறிவிக்க முடியும் என்பதால், மின்துறைக்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
பயன்பாட்டுக்கு ஏற்ப புதிய கட்டண முறை
இழுத்து மூடப்பட்ட சோதனை மையங்கள்!
இதுகுறித்து மின்வாரிய தொழில்நுட்ப பொறியாளர் ஒருவர் கூறியதாவது: மின்வாரியத்திற்கு சப்ளையாகும் மீட்டர்களில், 30 சதவீதம் வரை பழுதானவையாக உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், பெல், இந்தியா மீட்டர் லிமிடெட், ஐ.எம்.எல்., கேபிடல் போன்ற நிறுவனங்கள் மீட்டர் சப்ளை செய்தன. தற்போது, எல் அண்ட் ஜி., எல் அண்ட் டி., செக்யூர் போன்ற புதிய நிறுவனங்கள் மீட்டர் தயாரிப்பில் உள்ளன. கடந்த முறை சப்ளை செய்த நிறுவனங்கள், 10 ஆண்டு'சர்வீஸ்' செய்வதாகக் கூறினாலும், அந்த சேவை தொடரவில்லை. இதேபோல், மீட்டர்களை பரிசோதிக்க 'மீட்டர் ரிலே டெஸ்டிங்' (எம்.ஆர்.டி.,) மையங்கள் 2,600 இடங்களில் செயல்பட்டன. தற்போது, இவற்றில் 80 சதவீதம் மூடப்பட்டு, 'ஹைடென்ஷன்' மீட்டர்களுக்கு மட்டும் வட்டத்திற்கு ஒன்று என, 150 மையங்கள் செயல்படுகின்றன. நிறுவனங்கள் தரும் மீட்டர்களை, மின்வாரியம் சோதிக்காமல் சப்ளை செய்வதால், பழுதான மீட்டர்களை மாற்ற முடியாமல், மின்துறைக்கு மறைமுகமாக பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஹெச்.ஷேக்மைதீன்