ADDED : செப் 06, 2011 11:52 PM
திருவாடானை : திருவாடானை ஒன்றியத்தில் கவுன்சிலர் பதவியை காட்டிலும் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.திருவாடானை ஒன்றியத்தில் 47 ஊராட்சிகளும், 20 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளன.
ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற சில கவுன்சிலர்கள் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக இப்போதே முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஊராட்சி தலைவருக்கு கிராம மக்களிடம் உள்ள மரியாதை மற்றும் வளர்ச்சி பணிகளை விருப்பம் போல் செயல்படுத்தும் அதிகாரம் உள்ளது. எனவே இந்த பதவி மீது மோகம் ஏற்பட்டுள்ளது.பொதுவாக கவுன்சிலர் தங்கள் பகுதிகளில் செயல்படுத்தபடும் வளர்ச்சி பணிகளை ஒன்றிய கூட்டத்தில் கூற வேண்டும். நிதி நிலைக்கு ஏற்ப பணிகள் செயல்படுத்தபடும். அவ்வாறு செயல்படுத்தாத நிலை ஏற்படும் போது கவுன்சிலர் மீது மக்களிடம் அதிருப்தி ஏற்படும். இவ்வாறான பல காரணங்களால் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட பல கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.