மூன்று முறை பதிவு மூப்பு பட்டியல் பெற்றும் பணி நியமனம் இல்லை
மூன்று முறை பதிவு மூப்பு பட்டியல் பெற்றும் பணி நியமனம் இல்லை
மூன்று முறை பதிவு மூப்பு பட்டியல் பெற்றும் பணி நியமனம் இல்லை
ADDED : ஆக 21, 2011 01:59 AM
விருதுநகர் : தமிழக குடி நீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு மூன்று முறை பதிவு மூப்பு பட்டியல் பெற்றும் இன்று வரை பணி நியமனம் செய்யப்படவில்லை.
தமிழக குடி நீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியிடங்கள் நிரப்புவதற்காக மாவட்ட வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்து காத்திருப்போரது பதிவு மூப்பு பட்டியல் கடந்த ஆட்சியில் 2010 ல் பெறப்பட்டது. பணி நியமனம் செய்யப்படாத நிலையில் மீண்டும் ஒரு பட்டியலை குடி நீர் வடிகால் வாரியம் 2011 ஆண்டின் துவக்கத்தில் பெற்றது. பணி நியமனம் செய்யப்படாத நிலையில் பதிவு மூப்பில் தேர்வு பெற்றவர்கள் இது குறித்து வேலை வாய்ப்பு மையங்களை அணுகினர். 'அதிகாரிகள் பதிவு மூப்பு பட்டியல் கேட்டுள்ளனர். அனுப்பியுள்ளோம்,' என்றனர். 'பணி நியமனம் பற்றி குடி நீர் வடிகால் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும்,' என தெரிவித்தனர். இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின், மீண்டும் புதிய பதிவு மூப்பு பட்டியல் கடந்த மாதம் பெறப்பட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் கூறுகையில், ''பட்டியல் மட்டும் மூன்றாவது முறையாக குடி நீர் வடிகால் வாரியம் கேட்டுள்ளது. இது குறித்து குடி நீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தை அணுகிய போது பட்டியல் பெறப்பட்டுள்ளது. அரசு இது குறித்து உத்தரவிடவில்லை என தெரிவிக்கின்றனர். வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் எங்கள் வாழ்க்கையில் இப்படி பட்டியல் கேட்டு விட்டு பணி நியமனம் செய்யப்படாததால் தவிக்கும் நிலை உள்ளது,'' என்றார்.