ADDED : ஆக 06, 2011 02:30 AM
தர்மபுரி: பொதுத்துறை வங்கிகளில் அரசு பங்குகளை குறைக்க கூடாது என்பதை வலியுறுத்தி நேற்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஸ்டிரைக் நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என தேசியமயமாக்கப்பட்ட 16 வங்கிகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு நாள் ஸ்டிரைக் நடந்தது. மாவட்டத்தில் மொத்தம் 1,100 ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். தர்மபுரி ஸ்டேட் வங்கியில் அதிகாரிகள் சங்கம் சார்பில் மண்டல செயலாளர் ராஜவேலு, ஊழியர்கள் சங்கம் சார்பில் உதவி பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் ஸ்டிரைக் நடந்தது. வங்கி ஊழியர்கள் அலுவலகத்துக்குள் வந்து எவ்வித வேலைகளிலும் ஈடுபடாமல் இருந்தனர். இது குறித்து அதிகாரிகள் சங்கத்தின் மண்டல செயலாளர் ராஜவேலு கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளில் அரசு பங்குகளை குறைக்க கூடாது, தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பொது மற்றும் தனியார் வங்கிகளின் பங்குதாரர்களின் ஓட்டுரிமை உச்ச வரம்பு நீக்க கூடாது மற்றும் பணி நாட்களை ஐந்தாக குறைக்க வேண்டும். காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும். வாரிசு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.