ADDED : செப் 08, 2011 12:02 AM

சென்னை: டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னை முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. டில்லி ஐகோர்ட்டின் 5ம் எண் நுழைவாயிலில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. 2வது முறையாக குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால், சென்னையின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். சென்னை ஐகோர்ட் வளாகத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர மக்கள் அதிகம் கூடும் இடங்களான பிராட்வே பஸ் நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். பிளாட்பாரம் மற்றும் ரயில் பெட்டிகளிலும் மூன்று மோப்ப நாய்கள் சுழற்சி முறையிலும், 40க்கும் மேற்பட்ட போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு குறித்து வடசென்னை துணை கமிஷனர் அன்பு கூறும்போது, ''ஐகோர்ட்டில் அனைத்து வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர பஸ் மற்றும் ரயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.