Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிறுமியை கற்பழித்து கொல்ல முயற்சி கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி

சிறுமியை கற்பழித்து கொல்ல முயற்சி கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி

சிறுமியை கற்பழித்து கொல்ல முயற்சி கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி

சிறுமியை கற்பழித்து கொல்ல முயற்சி கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி

ADDED : ஆக 03, 2011 01:36 AM


Google News

சென்னை : சிறுமியை கற்பழித்துக் கொலை செய்ய முயற்சி, சிறுவன் கொலை வழக்கில், கொத்தனாருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, சென்னை ஐகோர்ட் உறுதி செய்தது.

நாகை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 12 வயதில் ஒரு மகள், 10 வயதில் மகன் உள்ளனர். இவரது வீட்டில் கட்டுமானம் நடந்து வந்தது. அப்போது, கொத்தனாராக வேலை பார்த்தவர் குமார். சிறிது நாட்கள் வேலை செய்து விட்டு, நின்று விட்டார்.



ஒரு நாள், கிருஷ்ணன் வீட்டுக்கு குமார் வந்தார். அப்போது கிருஷ்ணன், அவரது மனைவி இருவரும் வீட்டில் இல்லை. அவர்கள் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் அவரது மகள், மகன் மற்றும் சகோதரரின் மகள் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருந்தனர். வீட்டைப் பூட்டிக் கொண்டு உள்ளே மூவரும் இருந்தனர். தனது இரும்புச் சட்டியை எடுத்துச் செல்ல வந்ததாக, குமார் கூறியுள்ளார். அதற்கு, 'அப்பா வந்த பிறகு எடுத்துச் செல்லுங்கள்' என மகன் கூறியுள்ளான். ஆனால், அருகில் இருந்த சகோதரியோ, 'வீட்டில் குமார் வேலை பார்த்ததால், அவரது பொருளை எடுத்துச் செல்லட்டும்' எனக் கூறி, கதவைத் திறந்தாள். உடனே, வீட்டுக்குள் புகுந்த குமார், கதவைச் சாத்தினார். அரிவாளைக் காட்டி மிரட்டினார். வீட்டுக்குள் இருந்த மூவரும் சத்தம் போட்டனர்.



சிறுவனையும், சிறுமி ராதாவின் கைகளையும் கட்டி, பூஜை அறையில் உள்ள ஜன்னலோடு சேர்த்துக் கட்டினார். இதைப் பார்த்து பயந்து போன கிருஷ்ணாவின் மகள், படுக்கை அறையில் ஒளிந்து கொண்டாள். அங்கு வந்த குமார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது கயிற்றை அவிழ்த்து விட்டு, படுக்கை அறைக்கு, சிறுவன் ஓடி வந்தான். இதைப் பார்த்த குமார், சிறுவனை அருகில் உள்ள கழிப்பறைக்கு இழுத்துச் சென்று, கழுத்தில் வெட்டினான். அங்கு வந்த ராதாவின் கழுத்திலும் வெட்டினார். பின்னர் படுக்கை அறைக்கு வந்து, சிறுமி அணிந்திருந்த நகைகள், பீரோவில் உள்ள நகைகளைக் கொள்ளையடித்து விட்டு, சிறுமியின் கழுத்தையும் வெட்டி விட்டு தப்பி ஓடினார். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியும், ராதாவும் வீட்டை விட்டு வெளியில் வந்தனர்.



சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர், அவர்களை சீர்காழி மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அருகில் உள்ள சிதம்பரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். வெட்டுப்பட்ட சிறுவன், வீட்டிலேயே இறந்து கிடந்தான்.



இந்தச் சம்பவம், 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்தது. தலைமறைவான குமார், ஆறு ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார். குமார் மீது கற்பழிப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை, நாகை செஷன்ஸ் கோர்ட் விசாரித்தது. குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்து, நாகை செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் குமார் மனு தாக்கல் செய்தார். அப்பீல் மனுவை நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. போலீஸ் தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியன், கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் வி.எம்.ஆர்.ராஜேந்திரன், அரசு வழக்கறிஞர் அனந்தகிருஷ்ணன் ஆஜராகினர்.



'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஆறு ஆண்டுகளாகத் தலைமறைவாக குமார் இருந்துள்ளார். ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவளையும் விட்டு விலகிச் சென்றுள்ளார். மனித உயிர்கள் மீது, குமாருக்கு அக்கறை இல்லை. பள்ளி செல்லும் சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுவனைக் கொலை செய்துள்ளார். கடுமையான குற்றத்தை, கருணையற்ற முறையில் செய்துள்ளார்.



இது ஒரு அரிதிலும் அரிதான வழக்கு. மரண தண்டனை அளிப்பதற்கான வழக்கு தான் இது. தனது செயலுக்கு குமார் வருந்தியதாகத் தெரியவில்லை. சமூகத்துக்கு இவர் ஒரு தீங்கு. குமாரின் செயலானது, சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் விதத்தில் உள்ளது. குழந்தைகளிடம் கொடூரத்தன்மையைக் காட்டியிருப்பது பயங்கரமானது.எனவே, குமாருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்படுகிறது. அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us