திசை திருப்பப்படும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை: கேரள அமைச்சர் பேச்சு
திசை திருப்பப்படும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை: கேரள அமைச்சர் பேச்சு
திசை திருப்பப்படும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னை: கேரள அமைச்சர் பேச்சு
ADDED : செப் 26, 2011 11:03 PM

வேலூர்: ''முல்லைப் பெரியாறு அணை அரசியல்வாதிகளால் திசை திருப்பப்படுகிறது,'' என, வி.ஐ.டி.,யில் நடந்த விழாவில், கேரள அமைச்சர் பேசினார்.
வேலூர் வி.ஐ.டி., பல்கலையில் ஓணம் பண்டிகையையொட்டி, 'தனிமா 11' என்ற விழா நடந்தது.
கேரள அமைச்சர் கணேஷ் குமார், விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில், அரசியல்வாதிகள், முரண்பாடான கருத்துக்கள் சொல்லி, தமிழக மக்களை குழப்பி வருகின்றனர். தமிழக மக்களுக்கு முல்லைப் பெரியாறு அணை மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதில், எந்த மாறுபட்ட கருத்தும் கேரள மக்களுக்கு இல்லை. இந்திய நாடு பல மாநிலங்களை உள்ளடக்கியது. பலதரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நிலம், நீர், காற்று, அனைவருக்கும் சமமானது. தமிழக மக்களின் குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நிச்சயம் கேரளா தண்ணீர் கொடுக்கும். அதே சமயம், பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்பது, கேரள மக்களின் எண்ணம். அரசியல்வாதிகளால் இப்பிரச்னை திசைதிருப்பி விடப்படுகிறது. கேரள மக்களும், தமிழக மக்களும் சகோதர, சகோதரிகளாக வாழ வேண்டும். இவ்வாறு, அமைச்சர் கணேஷ் குமார் பேசினார். வி.ஐ.டி., துணைவேந்தர் ராஜு, விழா ஒருங்கிணைப்பாளர் நய்ஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.