/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கேள்விகள் அதிகமாக கேட்டு சந்தேகத்தை தீர்க்க வேண்டும் மாணவர்கள் : கலெக்டர் "அட்வைஸ்'கேள்விகள் அதிகமாக கேட்டு சந்தேகத்தை தீர்க்க வேண்டும் மாணவர்கள் : கலெக்டர் "அட்வைஸ்'
கேள்விகள் அதிகமாக கேட்டு சந்தேகத்தை தீர்க்க வேண்டும் மாணவர்கள் : கலெக்டர் "அட்வைஸ்'
கேள்விகள் அதிகமாக கேட்டு சந்தேகத்தை தீர்க்க வேண்டும் மாணவர்கள் : கலெக்டர் "அட்வைஸ்'
கேள்விகள் அதிகமாக கேட்டு சந்தேகத்தை தீர்க்க வேண்டும் மாணவர்கள் : கலெக்டர் "அட்வைஸ்'
தூத்துக்குடி : கேள்விகள் அதிகமாக கேட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியில் நடந்த தொழில் மையம் சார்பில் நடந்த தகவல் பரப்பு கருத்தரங்கில் கலெக்டர் ஆஷீஷ்குமார் கல்லூரி மாணவர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கு ஆலோசனை வழங்கினார்.
புதிய தொழில் செய்வோர் கையில் இருக்க வேண்டிய அனைத்து தகவல் அடங்கிய கையேட்டை கலெக்டர் ஆஷீஷ்குமார் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது; இந்த கருத்தரங்கிற்கு மாணவர்கள் அதிகம் பேர் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதே போல் அதிகமாக புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்கள் வந்துள்ளனர். பொதுவாக இதுபோன்ற கருத்தரங்கில் தொழில் துவங்குவதற்கு பல்வேறு ஆலோசனைகள், தொழில் வாய்ப்புகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது. இதில் அதிகமான கேள்விகளை அவர்களிடம் கேட்டு தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்கள் சந்தேகத்தை போக்கி கொள்ள வேண்டும். நாம் என்ன தொழில் செய்ய போகிறோம் என்று யோசித்து வைத்திருப்பவர்கள் அது பற்றிய முழு விபரத்தையும் கருத்தரங்கு மூலம் கேட்டு தெரிந்து கொண்டால் தொழில் செய்வதற்கு எளிதாக இருக்கும். புதிய திட்டங்கள் என்னென்ன உள்ளது, என்ன தொழில் செய்தால் சந்தை வாய்ப்புகள் இருக்கும் போன்றவற்றை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கேள்வி கேட்பதற்கு கூச்சப்பட கூடாது. நமக்கு உள்ள டவுட் கிளியர் ஆகும் வரை கேள்விகள் கேட்கலாம். அனைத்திற்கும் பதில் தெரிவிக்கப்படும்.
தொழில் செய்வதற்கு அரசு என்ன உதவிகள் செய்யும், மாவட்ட தொழில் மையத்தில் என்ன பயிற்சிகள் அளிக்கிறார்கள் என்பதை எல்லாம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். சிறு, குறு தொழில்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் வளர்ச்சி பெற இதுபோன்ற கருத்தரங்குகள் உதவியாக இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சிக்கான தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் (தொழில் நுட்பம்) பாக்யம், பண்ணைசாரா தொழில் திட்ட வாய்ப்பு குறித்து நபார்டு உதவி பொது மேலாளர் நடராஜன் குறு மற்றும் சிறு குழுமத் தொழில் வளர்ச்சி திட்டம் மற்றும் மத்திய அரசு தொழில் துவங்க அளிக்கும் உதவிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவன உதவி இயக்குநர் ஆருண் ரஷீத், இளைஞர் முன்னேற்றம் சுய வேலைவாய்ப்பு குறித்து நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள் குறித்து மதுரை உலக வங்கி பயிற்சியாளர் மற்றும் தொழில் ஆலோசகர் ஞானசம்பந்தன், தொழில் முனைவில் ஊக்கமும், சவால்களும் குறித்து தொழில் முனைவு ஊக்குவிப்பாளர் மற்றும் உலக வங்கி பயிற்சியாளர் ஐயங்கார் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சிகளை பி.ஆர்.ஓ., சுரேஷ் தொகுத்து வழங்கினார். மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் (தொழில்கள்) ஸ்வர்ணலதா நன்றி கூறினார். மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் முகேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் ஏராளமான கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்கள், புதியதாக தொழில் துவங்க உள்ளோர் அதிக அளவில் கலந்து கொண்டனர்.