Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஸ்கேன் முடிவுகள் தமிழில் கிடைக்குமா? : சாமானியரும் புரிந்து கொள்ள வேண்டும்

ஸ்கேன் முடிவுகள் தமிழில் கிடைக்குமா? : சாமானியரும் புரிந்து கொள்ள வேண்டும்

ஸ்கேன் முடிவுகள் தமிழில் கிடைக்குமா? : சாமானியரும் புரிந்து கொள்ள வேண்டும்

ஸ்கேன் முடிவுகள் தமிழில் கிடைக்குமா? : சாமானியரும் புரிந்து கொள்ள வேண்டும்

ADDED : ஆக 29, 2011 12:58 AM


Google News

சென்னை : 'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற முழக்கம் இன்று வரை வெறும் வார்த்தையோடு தான் உள்ளது.

நீண்ட போராட்டத்துக்குப் பின், மக்களுடன் நேரடி தொடர்புள்ள தபால், வங்கி போன்ற சில துறைகளில், ஏதோ பெயரளவுக்கு தமிழைப் பார்க்க முடிகிறது. ஆனால், உடல் ஆரோக்கியம், உயிர் சம்பந்தப்பட்ட மருத்துவத் துறையில், மருந்துக்குக் கூட தமிழ் இல்லை. மருந்து சீட்டில் துவங்கி, ரத்த பரிசோதனை, ஸ்கேன் முடிவுகள் என அனைத்திலும் ஆங்கிலம் தான். சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் ஆங்கிலத்தில் தான் மருந்து சீட்டுகளை எழுதுகின்றனர்.



தன் உடல் நிலையைத் தெரிந்து கொள்ளும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில், ரத்த பரிசோதனை, ஸ்கேன் முடிவுகள் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.ரத்த பரிசோதனை, ஸ்கேன் முடிவுகளை தமிழில் கொடுப்பதை டாக்டர்கள் சிலர் வரவேற்றாலும், நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்கின்றனர். ஆனால், தமிழில் கொடுப்பதை பொதுமக்கள் பலர் வரவேற்கின்றனர்.



இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கீதாலட்சுமி கூறும் போது, ''தமிழில் கொடுக்கும் போது அர்த்தம் மாறி, அனர்த்தமாகி விடக் கூடாது. சிறு குறிப்பாக தமிழில் கொடுக்க முயற்சிக்கலாம். ஸ்கேன் ரிப்போர்ட், ரத்த பரிசோதனை முடிவுகள் எல்லாம், அந்த பரிசோதனைக்கு பரிந்துரைத்த டாக்டர் படித்து தெரிந்து கொள்ளவே தரப்படுகிறது'' என்றார்.



பாரத் ஸ்கேன் மேலாண் இயக்குனர் டாக்டர் இமானுவேல் கூறியதாவது: ரத்த பரிசோதனை, ஸ்கேன் முடிவுகள் தமிழில் இருப்பதால், பெரிய பயன் ஏற்படப் போவதில்லை. மேலும், மருத்துவ தமிழ் வளர்ச்சி பெறாத இன்றைய நிலையில், தமிழில் துல்லியமாக கொடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான். பரிசோதனை முடிவுகள் தமிழில் இருந்தால், சாதகத்தை விட பாதகம் தான் அதிகம். தமிழகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரைத் திருநாள் மருத்துவமனைக்கு ஏராளமானோர் செல்கின்றனர். பரிசோதனை முடிவுகள் தமிழில் இருந்தால், அப்போது சிக்கல் தான். இதுபோன்ற நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயங்களுக்கு பதிலாக, நோய்களை முன்னரே தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு இமானுவேல் கூறினார்.



மகப்பேறு மற்றும் ஸ்கேன் மருத்துவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் இதுகுறித்து கூறியதாவது: தாய்மொழியில், ஸ்கேன், ரத்தப் பரிசோதனை முடிவுகளை கொடுப்பது வரவேற்கத்தக்கது. தமிழில் கொடுக்கும் போது, வியாதி குறித்து பாமரர்களும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், அது எந்தளவு நடைமுறையில் சாத்தியம் என்பதை ஆராய வேண்டும். தமிழில் சரியாக சொல்லாவிட்டால், நோய் குறித்து தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.



அரசு மற்றும் தனியார் மருத்துவத் துறையினர் இணைந்து செயல்பட்டால் தான், இது நடைமுறையில் சாத்தியம். முழுவதும் தமிழில் இருந்தால் வேறு மாநிலத்துக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ செல்லும் போது, அவர்களால் படித்து தெரிந்து கொள்ள முடியாது. எனவே, தமிழில் இருந்தாலும், ஆங்கிலத்திலும் சிறிய குறிப்பாவது இடம்பெற வேண்டும்.இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.



தமிழில் வேண்டும் எனக் கேட்டு, சர்க்கரை நோயாளி மோகன சுந்தரி கூறியதாவது: ஸ்கேன் ரிப்போட்டில் என்ன சொல்லப்பட்டுள்ளது என, எனக்கு புரிவதில்லை. ஸ்கேன் எடுப்பவர்களிடம் கேட்டால், 'நீங்கள் உங்கள் டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்' என்கின்றனர். ஒரு சில டாக்டர்களை தவிர, பெரும்பாலான டாக்டர் ஸ்கேன் ரிப்போட்டில் சொல்லப்பட்டிருப்பது என்ன என, தெளிவாகச் சொல்வதில்லை. அவர்களுக்கு நேரமும் இல்லை. ஸ்கேன் பரிசோதனை விவரங்கள் தமிழில் இருந்தால், என்னைப் போன்றவர்களும் தெரிந்து கொள்ள முடியும். சுருக்கமாகத் தமிழில் விளக்கி விட்டு, டாக்டர்களுக்காக ஆங்கிலத்தில் விரிவாகக் கொடுக்கலாம். இவ்வாறு மோகன சுந்தரி கூறினார்.



மூட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முகவர் அண்ணாமலை கூறும்போது, ''ரத்த பரிசோதனை முடிவுகளை தமிழில் கொடுத்தால் நன்றாக இருக்கும். அதே நேரத்தில், சுத்தத் தமிழில் கொடுத்தால் எதுவும் புரியாது.

தமிழில் கொடுக்கும் முன், இதையெல்லாம் கவனிக்க வேண்டும். நோயாளிக்கு புரிவதற்காக சுருக்கமாகத் தமிழிலும், உலகின் எந்த பகுதிக்குச் சென்றாலும் டாக்டர் தெரிந்து கொள்ள வசதியாக, ஆங்கிலத்திலும் இருப்பது நல்லது'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us