பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: இலங்கையுடன் எந்த உறவும் கூடாது என, ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் நிலையில், அந்நாட்டு கடற்படையுடன், கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது சரியல்ல.
மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் அறிக்கை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அணுசக்தி விபத்து பொறுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற மக்களின் கவலை குறித்து, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவற்றைத் திருப்திகரமாக செய்து முடிக்கும் வரை, கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலையத்தால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம்; மின் உற்பத்தி அடுத்த பட்சம் தான்.
பா.ஜ., ஆட்சியில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி பேட்டி: அன்னா ஹசாரேவின் பின்னால், மக்கள் திரண்டது, லஞ்ச ஊழல் உட்பட பல விஷயங்கள் குறித்து, அவர்களுக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடு தான்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் பேட்டி: சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்திருந்தோம். ஆனால், அடுத்த இரு நாட்களில், தனித்துப் போட்டி என, தி.மு.க., அறிவித்து விட்டது; இதை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம், எங்கள் கட்சியினர் அதிக இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும்.
ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேச்சு: இந்தியாவிற்கு மட்டுமல்லாது இந்த உலகிற்கே, பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது. நக்சலிசம் இந்தியாவிற்கு பெரும் பிரச்னையாக உள்ளது. நக்சலைட்கள் வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி., அழகிரி பேச்சு :கடந்த, 2000ம் ஆண்டில், மூன்று பேருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தீர்மானம் போட்ட கருணாநிதி, 2011ல், அதே குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குகிறார். புலிகளுக்கு தமிழர்களிடம் ஆதரவிருந்தால், வைகோ எப்போதோ முதல்வராக ஆகியிருப்பார்.