ஆம்னி பஸ் - லாரி மோதல்: டிரைவர்கள் தீக்கிரை:பயணிகள் உயிர் தப்பினர்
ஆம்னி பஸ் - லாரி மோதல்: டிரைவர்கள் தீக்கிரை:பயணிகள் உயிர் தப்பினர்
ஆம்னி பஸ் - லாரி மோதல்: டிரைவர்கள் தீக்கிரை:பயணிகள் உயிர் தப்பினர்

குறிச்சி:கோவை அருகே, மதுக்கரை - நீலம்பூர் பை-பாஸ் ரோட்டில், தனியார் ஆம்னி பஸ் மீது, லாரி மோதி தீப்பிடித்தது.
நேற்று அதிகாலை, 12.45 மணிக்கு, மதுக்கரை - நீலம்பூர் பை-பாஸ் ரோட்டில், பொள்ளாச்சி மெயின் ரோடு சந்திப்பை அடுத்து, 2 கி.மீ., தொலைவிலுள்ள ஜெ.ஜெ., நகர் அருகே, பஸ்சின் முன், சேலத்துக்கு மண் ஏற்றிய லாரி சென்றது.எதிரே கேரளா நோக்கி, மீன் செதில்கள் ஏற்றி வந்த லாரி, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது, மண் லாரி மீது மோதியது. பின், கட்டுப்பாட்டை இழந்து, ஆம்னி பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் லாரியும், பஸ்சும் தீப்பிடித்தன.பஸ் டிரைவர் மோகன்தாஸ், பயணிகள் அனைவரும் இறங்கிய பின், கீழே இறங்க முற்பட்ட போது, பஸ்சின் முன்கதவு அருகே, தீயில் சிக்கி பலியானார்; லாரி டிரைவரும் தப்ப முடியாமல் தீக்கிரையானார்.
பஸ்சின் மாற்று டிரைவர் சதீஷுக்கு, கால் முறிவு ஏற்பட்டதோடு, 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.தீயணைப்பு படையினர், தீயை அணைத்தனர்; இருப்பினும், இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து போயின. கிரேன்கள் மற்றும் பொக்லைன் வரவழைக்கப்பட்டு, இரு வாகனங்களும், ரோட்டின் அருகேயுள்ள பள்ளத்தில் தள்ளி விடப்பட்டன.பஸ்சிலிருந்து டீசல் ஒழுகி, மீண்டும் பஸ் தீப்பிடித்ததை தொடர்ந்து, தீயணைப்பு படையினரால் தீ அணைக்கப்பட்டது. விபத்தால், ஆறு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.