ADDED : செப் 16, 2011 11:38 PM
சென்னை: நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சங்கத்தின் நடவடிக்கைகளில் குறுக்கிட, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனுக்கு, சென்னை சிவில் கோர்ட் தடை விதித்துள்ளது.
சென்னை செம்பியத்தைச் சேர்ந்தவர் எல்.டி.தாமஸ். திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர்கள், சென்னை சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: நாங்கள் தி.மு.க.,வில் உள்ளோம். நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வருகிறோம். நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளோம். இந்தச் சங்கம், தி.மு.க.,வின் இணைப்புப் பெற்றது. சங்கத்தின் தேர்தல் தொடர்பாக, இருவர் வழக்கு தொடுத்து, தடை உத்தரவு பெற்றனர். தடை உத்தரவு இருந்தும், தேர்தல் நடந்தது. இதுதொடர்பாக, கோர்ட் அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து, பழிவாங்கும் விதமாக, எங்களை சங்கத்தில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர். விசாரணை எதுவும் இல்லை. இதுதொடர்பாக, சிவில் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளோம். இந்நிலையில், எந்த நோட்டீசும் கொடுக்காமல், எங்களை கட்சியில் இருந்தும், சங்கத்தில் இருந்தும் 'சஸ்பெண்ட்' செய்வதாக, பொதுச் செயலர் அன்பழகன் அறிவித்துள்ளார். சங்க நடவடிக்கைகளில் குறுக்கிட, அவருக்கு அதிகாரமில்லை. எனவே, சங்கம் மற்றும் கட்சி நடவடிக்கைகளில், நாங்கள் ஈடுபடுவதில் குறுக்கிட, கட்சியின் பொதுச் செயலர் அன்பழகனுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, சிவில் கோர்ட் நீதிபதி புரு÷ஷாத்தமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் செங்குட்டுவன் ஆஜரானார். அக்டோபர் 7 ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தும், மனுவுக்குப் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும், நீதிபதி புருஷோத்தமன் உத்தரவிட்டார்.