/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கல்வி அலுவலகத்தில் முறைப்பணி வேண்டவே வேண்டாம் : பெரும் பீதியில் பெண் ஊழியர்கள்கல்வி அலுவலகத்தில் முறைப்பணி வேண்டவே வேண்டாம் : பெரும் பீதியில் பெண் ஊழியர்கள்
கல்வி அலுவலகத்தில் முறைப்பணி வேண்டவே வேண்டாம் : பெரும் பீதியில் பெண் ஊழியர்கள்
கல்வி அலுவலகத்தில் முறைப்பணி வேண்டவே வேண்டாம் : பெரும் பீதியில் பெண் ஊழியர்கள்
கல்வி அலுவலகத்தில் முறைப்பணி வேண்டவே வேண்டாம் : பெரும் பீதியில் பெண் ஊழியர்கள்
ADDED : ஜூலை 25, 2011 09:37 PM
கோவை : மாவட்ட கல்வி அலுவலகங்களில் வார விடுமுறை நாட்களில் முறைப்பணிக்கு நியமிக்கப்படும் பெண் ஊழியர்கள் நடுங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாள் முழுவதும் ஏதோ ஒரு ஆணுடன் தனியாக பொழுதை கழிக்க வேண்டிய நிலையால், அந்த பெண் ஊழியர் மட்டுமல்லாமல், அவர் மாலையில் வீடு திரும்பும் வரை அவரது குடும்பத்தினரும் தவிக்கும் நிலை உள்ளது. மாவட்ட கல்வி அலுவலகங்கள் சனி, ஞாயிறு நாட்கள் செயல்படாது. ஆனாலும், சென்னையில் இருந்து எப்போது வேண்டுமானாலும், என்ன தகவல் வேண்டுமானாலும் கேட்பார்கள் என்பதால், இந்த இரு நாட்களும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஊழியர் சிறப்பு டூட்டி பார்க்க வேண்டும். இந்த நாட்களை வேறு இரு நாட்கள் விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். 'டர்ன் டூட்டி' (முறைப்பணி) எனப்படும் இந்த பணிக்கு, பள்ளிகளில் அலுவலக உதவியாளர்களாக பணிபுரிபவர்களே நியமிக்கப்படுகின்றனர். இதில் பெண் உதவியாளர்களாக நியமிக்கப்படும் ஊழியர்கள், முறைப்பணி ஒதுக்கீடு என்றாலே அலறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நாட்களில் பெரிதாக பணி எதுவும் இல்லாவிட்டாலும், நாள் முழுவதும் ஏதோ ஓர் ஆணுடன் தனியாக பொழுதை கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதே காரணம். சில ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற முறைப்பணி நாளில், அலுவலக ஊழியர் ஒருவர் தனது கம்ப்யூட்டரில் ஆபாசப்படம் பார்த்து பொழுதை கழித்ததாக புகார் எழுந்தது. அலுவலக உயர் அதிகாரி வரை சென்ற இந்த விவகாரம், இறுதியில் வெளியே கசியாமல் அப்படியே அமுக்கப்பட்டது.
இதே போல், கடந்த ஆண்டு ஒரு கல்வி அலுவலகத்தில் வினாத்தாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஒருவரிடம், முறைப்பணி ஊழியர் ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயன்று, 'மொத்து' வாங்கிய சம்பவமும் உண்டு. முறைப்பணிக்கு நியமிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையே உள்ளது. இதனால், முறைப்பணி என்றாலே பெண் அலுவலக உதவியாளர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் கணவர் உட்பட குடும்பத்தினரும் நடுங்கும் நிலை உருவாகியுள்ளது. முறைப்பணிக்கு நியமிக்கப்படுபவர்களின் பட்டியலை, உயர் அதிகாரியின் பார்வைக்கு கொண்டு செல்லாமல், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள ஊழியர்களே முடிவு செய்து விடுவதுதான் இதற்கு காரணம். வயதான அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஆண் உதவியாளர்கள் இப்பட்டியலில் அரிதாகவே உட்படுத்தப்படுவது, குறிப்பிடத்தக்கது. உயர் கல்வி அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு, பெண் அலுவலக உதவியாளர்கள் நிம்மதியுடன் பணிபுரியும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.