ADDED : ஜூலை 11, 2011 11:35 PM
பொன்னேரி : வேண்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.
காலை 5 மணிக்கு நான்காம் கால யாக பூஜை முடிந்து, 7.30 மணிக்கு யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பட்டன. தொடர்ந்து 8.50 மணிக்கு, கோவில் விமானத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு விநாயகருக்கு மகா அபிஷேகம், பூஜை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்துச் சென்றனர். அதேபோல், பெரும்பேடு முத்துக்குமார சுவாமி கோவிலிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 7.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 10 மணிக்கு மூலவர் விமான கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகமும், முத்து விநாயகர், முத்து பாலதண்டாயுதபாணி, கோஷ்ட தேவதைகள், அன்னபூரணி உடனுறை ஜோதீஸ்வரர், நவகோள்கள், கால பைரவர், நாகம், சுமித்ரேஸ்வரர், சண்டிகேஸ்வரர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு, வள்ளி தெய்வானை உடனுறை முத்துக்குமார சுவாமி (உற்சவர்) பெருமானுக்கு மகா கும்பாபிஷேகமும், 11.30 மணிக்கு முருகப் பெருமானுக்கு (மூலவருக்கு) அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 8 மணிக்கு திருவீதி உலாவும் நடந்தது.