ADDED : செப் 10, 2011 01:22 AM
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, காரில் சென்னை திரும்பிய போது, அவர் பயணித்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை செங்குன்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வாடகை காரில், சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.
கார், லயோலா கல்லூரி அருகே வந்த போது, கும்பல் ஒன்று திடீரென காரை தடுத்து நிறுத்தியது. காரில் இருந்த நல்லகண்ணு உள்ளிட்டவர்களை, அங்கேயே இறக்கி விட்டனர். காரின் சாவியையும் பறித்துக் கொண்டனர். சிறிது நேரத்தில், வேறோரு காரில் நல்லகண்ணு சென்று விட்டார்.விசாரணையில், 'வாடகை காரின் உரிமையாளரான மோகன், வங்கிக் கடனில் காரை வாங்கியுள்ளார். அதற்கான மாதத்தவணையை சில மாதங்களாக செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், வங்கி சார்பில் வந்த கும்பல், காரை பறித்துச் சென்றுள்ளது' என்பது தெரியவந்தது.கட்சி சார்பில் வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாயை, கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர் நல்லகண்ணு. அவரையே வழிமறித்து காரை பிடுங்கிச் சென்றுள்ளனர். குறைந்தபட்சம் அவர் வீட்டில் இறங்கிய பிறகாவது, காரை பறிமுதல் செய்து இருக்கலாம் என, வேடிக்கை பார்த்தவர்கள் புலம்பினர்.