அதிகரித்துக் கொண்டே செல்லும் தங்கம் விலை தங்க நாணயங்கள் முதலீட்டில் மக்கள் ஆர்வம்
அதிகரித்துக் கொண்டே செல்லும் தங்கம் விலை தங்க நாணயங்கள் முதலீட்டில் மக்கள் ஆர்வம்
அதிகரித்துக் கொண்டே செல்லும் தங்கம் விலை தங்க நாணயங்கள் முதலீட்டில் மக்கள் ஆர்வம்
ADDED : செப் 01, 2011 12:14 AM

சென்னை : நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதால், தங்க நாணயங்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
முன் எப்போதும் இல்லாத வகையில், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்ற எண்ணத்தாலும், தை மாதத்தைத் தொடர்ந்து, முகூர்த்த நாள் என்பதாலும், பொதுமக்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை, தங்கத்தில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். ஆபரண தங்கத்தில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, தங்க நாணயங்களாக வாங்கும் போது செய்கூலி, சேதாரம் போன்றவற்றிற்கான கட்டணம் இல்லை. இதனால், ஆபரண தங்கத்தைக் காட்டிலும், தங்க நாணயங்கள் விலை குறைவாக உள்ளது என்பதுடன், அதன் மதிப்பும் மாறாமல் இருக்கும். தேவை ஏற்படும் போது, அதை வேண்டிய வடிவங்களில் நகையாக மாற்றிக் கொள்ளலாம். இதன் காரணமாக தங்க நாணயத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை அதிகரிப்பால், எடை குறைவான தங்க நகைகள் வாங்குவது அதிகரித்து வருகிறது. புதிய வடிவங்கள் மற்றும் பார்வைக்கு, 'பளிச்' என்று இருப்பதுடன் அதிக எடை போலவும் தோற்றம் அளிக்கிறது. தற்போது, பெண்கள் எடை குறைவான தங்க நகைகள் வாங்க, அதிக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், 10 சவரனில் நெக்லஸ் செய்தால் மட்டுமே, அனைவரையும் கவரும்படியாக இருக்கும் என, மக்கள் ஆர்வமாக வாங்கினர். அதிகரித்து வரும் விலையால், தங்க நகை வாங்கும் ஆர்வம் குறைந்து விடுமோ என, நகை வியாபாரிகள் அச்சப்பட்டனர். இதற்காக, நகை வியாபாரிகள், 2 முதல் 3 சவரன் தங்கத்திலேயே அழகிய வடிவங்களில் நெக்லஸ் செய்யத் துவங்கியுள்ளனர். வசதி படைத்தவர்கள், குறைந்த சவரனில் தயாரிக்கப்படும் நகைகளை வாங்குகின்றனர். வசதி குறைந்தவர்கள், இருக்கும் பணத்திற்கு ஏற்றவாறு தங்க நாணயங்களை வாங்கிக் கொள்கின்றனர். தங்க நாணயத்தை வாங்குவது குறித்து, இல்லத்தரசி வித்யா கூறும்போது, 'தங்கத்தின் விலை அதிகமாக உள்ளதால், ஒரு சவரன் தங்க நகை வாங்குவதே சிரமமாக உள்ளது. அதேசமயம், தேவைக்கேற்ப நாணயங்கள் வாங்கி வைத்துக் கொண்டு, பிறகு அதை ஆபரணமாக மாற்றிக் கொள்ளலாம்' என்றார்.
இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:
தங்கத்தை நாணயங்களாக வாங்குவதே சிறந்தது என்று மக்கள் நினைக்கின்றனர். சென்னையில் விற்பனையாகும், மொத்த தங்கத்தில், சரிபாதி தங்க நாணயங்கள். வங்கி, தபால் நிலையங்கள் போன்றவற்றில் விற்கப்படும், ஒரு சவரன் தங்க நாணய விலையைவிட, சில்லறை வியாபாரிகளிடம் 800 ரூபாய் வரை குறைவாக உள்ளது. ஏனெனில், தங்க நாணயத்தை, மீண்டும் ஆபரணமாக, மாற்ற தங்களிடமே மக்கள் வருவர் என்ற காரணத்தால், குறைந்த லாபத்தில் தங்க நாணயங்களை விற்பனை செய்கின்றனர். இவ்வாறு ஜெயந்திலால் ஷலானி கூறினார்.
கடந்த 1975ம் ஆண்டு முதல் பத்து கிராம் தங்கத்தின் விலை
ஆண்டு ரூபாய்
1975 540
1985 2,130
1995 4,680
2005 7,000
2009 15,185
2010 16,350
2011 25,240