/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/டைட்டான் தொழிலாளர்கள் "திடீர்' வேலைநிறுத்தம்டைட்டான் தொழிலாளர்கள் "திடீர்' வேலைநிறுத்தம்
டைட்டான் தொழிலாளர்கள் "திடீர்' வேலைநிறுத்தம்
டைட்டான் தொழிலாளர்கள் "திடீர்' வேலைநிறுத்தம்
டைட்டான் தொழிலாளர்கள் "திடீர்' வேலைநிறுத்தம்
ADDED : செப் 05, 2011 11:54 PM
ஓசூர்: ஓசூர், டைட்டான் தொழிற்சாலையில், ஊக்கத்தொகை வழங்கக் கோரி தொழிலாளர்கள், திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால், நேற்று ஒரே நாளில் பல கோடி ரூபாய்க்கு தங்க நகைகள், வாட்ச்சுகள் மற்றும் ஆட்டோ மொபைல் மிஷின்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஓசூர் சிப்காட்-1ல், டைட்டான் தொழிற்சாலையில் வாட்சுகள், தங்க நகைகள் மற்றும் ஆட்டோ மொபைல் மிஷின்கள் தயாரிப்பு ஆகிய மூன்று யூனிட்டுகள் செயல்படுகிறது. 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்க்கின்றனர். இந்த தொழிற்சாலையில், நிர்வாக பிரிவில் கடந்த காலத்தில் குறைந்த ஊதியத்தில் வேலைபார்த்த சீனியர் அதிகாரிகளுக்கு, தொழிற்சாலை நிர்வாகம் லாபத்தில், ஒரு ஆண்டு ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்கியது. தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. அதிருப்தியடைந்த தொழிலாளர்கள், தொழிற்சாலை தொழிற்சங்க நிர்வாகிகள் மூலம் பலமுறை ஊக்கத்தொகை வழங்கக்கோரி பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க மறுத்தது. ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் நேற்று, திடீரென்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தங்க ஆபரணங்கள், வாட்சுகள் மற்றும் ஆட்டோ மொபைல் யூனிட்டில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் நேற்று, வேலையை புறக்கணித்து தொழிற்சாலை முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்தும், ஊக்கத்தொகை வழங்கக் கோரியும் கோஷமிட்டனர். தொழிற்சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தனர். துணை தலைவர்கள் வெங்கடேஷன், விஜயன், துணை செயலாளர்கள் விஜயன், செந்தில்குமார், ஸ்ரீதர், கிருஷ்ணவேனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்க தலைவர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கிய போது, தொழிலாளர்களும் குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்தனர். தற்போது, லாபத்தில் இயங்குகிறது. டைட்டான் தொழிற்சாலை பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அதனால், தொழிற்சாலை லாபத்தில் ஊக்கத்தொகை வழங்கும்போது, தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும். அதிகாரிகளுக்கு மட்டும், 5 லட்சம் முதல், 40 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கிவிட்டு, தொழிலாளர்களை மட்டும் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயம். இந்த போராட்டம் ஒரு துவக்கம் தான். தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தால், நேற்று வாட்ச்சுகள், தங்க நகைகள் மற்றும் ஆட்டோ மொபைல் மிஷின்கள் தயாரிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும், பல கோடி ரூபாய்க்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாக தரப்பினர் கூறுகையில், 'தொழிலாளர்களுக்கு, எப்போதும் மார்க்கெட் ஊதியம்தான் வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், நிர்வாகத்தில் வேலைபார்த்தவர்கள் கடந்த காலத்தில் குறைந்த ஊதியம் பெற்றனர். அதனால், பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து, குறைந்த ஊதியம் பெற்றவர்கள், 30 சதவீதம் பேருக்கு மட்டும் தான் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வழங்கப்படவில்லை' என்றனர்.