Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மின் இணைப்பு இல்லாததால் வீணாகும் தானியங்கி சிக்னல்கள்

மின் இணைப்பு இல்லாததால் வீணாகும் தானியங்கி சிக்னல்கள்

மின் இணைப்பு இல்லாததால் வீணாகும் தானியங்கி சிக்னல்கள்

மின் இணைப்பு இல்லாததால் வீணாகும் தானியங்கி சிக்னல்கள்

ADDED : செப் 14, 2011 03:09 AM


Google News
செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் பகுதியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல்கள், பயன்பாடின்றி வீணாகின்றன.செங்கல்பட்டில் அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் உள்ளன. தினமும், ஏராளமான மக்கள், வெளியூர்களிலிருந்து வந்து செல்கின்றனர். இதனால், செங்கல்பட்டில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.இங்குள்ள ஜி.எஸ்.டி., சாலை வழியாக, செங்கல்பட்டிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு இயக்கப்படும், அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்கின்றன.

இச்சாலையில், திருக்கழுக்குன்றம் சாலை இணையும் ராட்டிணக்கிணறு சந்திப்பு, காஞ்சிபுரம் சாலை இணையும், பழைய பஸ் நிலையம் பகுதி, ஆகியவை முக்கிய சந்திப்புகளாக உள்ளன.இங்கு, காலை மற்றும் மாலை வேளையில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, முக்கிய சந்திப்புகளில், சிக்னல் அமைக்க, போக்குவரத்துப் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, கடந்தாண்டு ஜூலை மாதம் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டன. ஆனால், மின் இணைப்பு வழங்கப்படாததால், தானியங்கி சிக்னல்கள் இணைக்கப்படவில்லை.அதேபோல், மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, கிழக்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை, கங்கை கொண்டான் மண்டபம் தெரு ஆகியவை இணையும் சந்திப்பில், மூன்று மாதங்களுக்கு முன், தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது.ஆனால், மின் இணைப்பு வழங்கப்படாததால், அவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளன. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட, தானியங்கி சிக்னல்கள் யாருக்கும் பயனின்றி வீணாகுவது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, போலீசார் கூறும்போது, 'உயரதிகாரிகள் பரிந்துரையின் பேரில், தனியார் நிறுவனம் தானியங்கி சிக்னல்களை அமைத்தது. அவற்றுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்த விவரமும் தெரியவில்லை. அடுத்தடுத்து வந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை,' என்றனர்.மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல்களை, பயன்பாட்டிற்கு கொண்டு வர, போலீஸ் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ம.சங்கர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us