Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஏரிகளை சீரமைக்க ரூ.5.39 கோடி ஒதுக்கீடு

ஏரிகளை சீரமைக்க ரூ.5.39 கோடி ஒதுக்கீடு

ஏரிகளை சீரமைக்க ரூ.5.39 கோடி ஒதுக்கீடு

ஏரிகளை சீரமைக்க ரூ.5.39 கோடி ஒதுக்கீடு

ADDED : ஜூலை 14, 2011 10:46 PM


Google News

ஊத்துக்கோட்டை : ஆரணி ஆறு வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்ட, 13 ஏரிகளை சீரமைக்க, 5.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி, கொற்றலை, கூவம் ஆகிய ஆறுகள் உள்ளன. இந்த ஆறுகளிலிருந்து கால்வாய் மூலம் ஏரி, குளம் ஆகியவற்றிற்கு, நீர்வரத்துக் கால்வாய் மூலம் நீர் அனுப்பி, மேற்கண்ட இடங்களில் தேக்கி வைக்கப்பட்டு, பின்னர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக ஏரிகள் தூர்வாராமலும், நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவைகளில் சிக்கி கொண்டதால், நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.



இந்நிலையில், உலக வங்கி திட்டத்தின் மூலம், நிதியுதவி பெற்று, ஏரிகளின் கரைகள், உடைந்த கலங்கல்கள் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ''ஆரணி ஆறு வடிநில கோட்டத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ், உலக வங்கி நிதியுதவியுடன் புதுப்பித்தல், புனரமைத்தல், ஏரிகளின் கரைகளை பலப்படுத்துதல், உடைந்த கலங்கல், மதகு ஆகியவற்றை சிமென்ட் கான்கிரீட்டால் அமைத்தல், நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாருதல், எல்லை வரையறுத்து ஆக்கிரமிப்பு அகற்றி, எல்லைக் கற்களை நடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



ஆரணி ஆற்றிலிருந்து நீர் செல்லும் பனப்பாக்கம் ஏரி, ஆலப்பாக்கம், ஏனம்பாக்கம், கல்பட்டு, மாலந்தூர், வடமதுரை, அரியப்பாக்கம், ஆத்துப்பாக்கம், மஞ்சங்காரணை உள்ளிட்ட, 13 ஏரிகளுக்கு, 5 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது,'' என தெரிவித்தார். இப்பணிகளை, ஆரணி ஆறு வடிநில கோட்டப் பொறியாளர் (சென்னை) வெங்கடாசலம் தலைமையில், ஆரணி ஆறு உபகோட்டம் பொன்னேரி உதவி செயற்பொறியாளர் மகேஷ் நாகராஜன் மற்றும் இளநிலை பொறியாளர்(பாசனப்பிரிவு ஊத்துக்கோட்டை வட்டம்) வெங்கடேசலு ஆகியோர் பார்வையிட்டு செய்து வருகின்றனர்.



- எம்.யுவராஜ் -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us