UPDATED : செப் 13, 2011 01:44 PM
ADDED : செப் 13, 2011 01:10 PM
விழுப்புரம்: முன்னாள் தி.மு.க.அமைச்சர் பொன்முடி மீதான ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விழுப்புரம் பெரியார் நகரில், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினருக்கு சொந்தமான காலியிடத்தை, சிகா கல்வி அறக்கட்டளைக்கு மிரட்டி வாங்கிய வழக்கில், கடந்த 31ம் தேதி, பொன்முடி, கூட்டுறவு சங்கச் செயலர் சாந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவரும் ஜாமின் வழங்கக் கோரி, விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர் இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தி.மு.க. அமைச்சர் பொன்முடி மீதான ஜாமின் மனு இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் மனுவை நீதிபதி தியாகராஜ மூர்த்தி தள்ளுபடி செய்தார்.
தள்ளுமுள்ளு: ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டதும். தி.மு.க. வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் கண்டன கோஷம் எழுப்பினர். அப்போது அங்கிருந்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சிவா தலைமையில் தி.மு.க. வக்கீல்களை பார்த்து இங்கு ஏன் கோஷம் போடுகிறீர்கள் வெளியே போகும்படி கூறினார். இதனால் தி.மு.க. , அ.தி.மு.க. வழக்கறிஞர்களிடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் கோர்ட் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.