முதல்வர் அறிக்கைக்கு பிறகும் உண்ணாவிரதம்:கூடங்குளத்தில் 20 பேர் நிலைமை கவலைக்கிடம்
முதல்வர் அறிக்கைக்கு பிறகும் உண்ணாவிரதம்:கூடங்குளத்தில் 20 பேர் நிலைமை கவலைக்கிடம்
முதல்வர் அறிக்கைக்கு பிறகும் உண்ணாவிரதம்:கூடங்குளத்தில் 20 பேர் நிலைமை கவலைக்கிடம்
UPDATED : செப் 16, 2011 08:45 PM
ADDED : செப் 16, 2011 07:58 PM
திருநெல்வேலி :கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை கண்டித்து 7வது நாளாக நாளையும் உண்ணாவிரதத்தை தொடர உள்ளதாகபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள அணுமின்நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி துவங்க உள்ளது.ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் அண்மையில் நிகழ்ந்துள்ள அணுஉலை பாதிப்புகளால்கூடங்குளத்திலும் பாதிப்பு ஏற்படலாம் எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் இல்லாவிட்டால்உற்பத்தியை துவக்க கூடாது என கோரி கிராம மக்கள், கடந்த செப்டம்பர் 11 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தகரையில் லூர்துமாதா ஆலயம் முன்பாக நடந்துவரும் உண்ணாவிரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் பங்கேற்கின்றனர். கூடங்குளம், இடிந்தரை உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உள்பட சுமார் 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று 16ம் தேதி 6வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இவர்களில் இனிதா, மணிகண்டன், முருகன், பெப்சி கணேசன் உள்ளிட்ட சுமார் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கையில் போராட்டக்காரர்கள் திருப்தி கொள்ளவில்லை. 7வது நாளாக நாளை 17ம் தேதியும் போராட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்தனர். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி நேரில் வந்து போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தார். கூடங்குளத்தை மூட வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.