Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பர்கூர், கடம்பூர், தாளவாடி மக்களுக்கும் மின் அடுப்பு! அரசுக்கு, மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

பர்கூர், கடம்பூர், தாளவாடி மக்களுக்கும் மின் அடுப்பு! அரசுக்கு, மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

பர்கூர், கடம்பூர், தாளவாடி மக்களுக்கும் மின் அடுப்பு! அரசுக்கு, மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

பர்கூர், கடம்பூர், தாளவாடி மக்களுக்கும் மின் அடுப்பு! அரசுக்கு, மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

ADDED : செப் 21, 2011 01:23 AM


Google News
ஈரோடு : ஈரோடு மாவட்டம் பர்கூர், கடம்பூர் மலை வாழ் மக்களுக்கும் மின் அடுப்பு வழங்க வேண்டும் என, மலைவாழ் பழங்குடி முன்னேற்ற சங்கத்தினர் கோரியுள்ளனர். தமிழகத்தில் ஆட்சியமைத்தவுடன் அ.தி.மு.க., அரசு, தனது தேர்தல் வாக்குறுதியான இலவச மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தை வேகமாக நிறைவேற்றி வருகிறது. குளிர் பகுதியான கொடைக்கானல், நீலகிரி மலைவாழ் மக்களுக்கு, மின் விசிறிக்கு பதில் மாற்று பொருள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை பரிசீலித்த அரசு, 'திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மலை வாழ் மக்களுக்கு, மின் விசிறிக்கு பதிலாக, விரைந்து சமைக்க உதவும், மின் அடுப்பு வழங்கப்படும்' என்று அறிவித்தது. இதுபோல், ஈரோடு மாவட்டம், பர்கூர், கடம்பூர் மலை வாழ் மக்களுக்கும் மின் விசிறிக்கு பதிலாக, மின் அடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மலைவாழ் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க செயலாளர் ராமலிங்கம் கூறியதாவது: பர்கூர் மலையில் 33 கிராமங்கள், கடம்பூர் மலையில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், தாளவாடி மலைப்பகுதி என மூன்று மலைகளிலும், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் உள்ளதால், எப்போதும் குளிர்ச்சியான நிலையே உள்ளது. காடுகளில் கிடைக்கும் சுள்ளிகளை பொறுக்கியும், சில நேரங்களில் காய்ந்த மரங்களை வெட்டியும் மலை கிராம மக்கள், உணவு சமைக்கின்றனர். காடுகளில் சுள்ளி பொறுக்கும் போது, வன விலங்குகளால் தாக்கப்படும் அசம்பாவிதமும் அடிக்கடி நிலவுகிறது.

நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட மலை கிராம மக்களுக்கு, மின் விசிறிக்கு பதிலாக, மின் அடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபோல, பர்கூர், கடம்பூர், தாளவாடி உள்ளிட்ட மலை கிராமத்துக்கும், மின் அடுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் அடுப்பு வழங்கினால், வன விலங்குகளிடமிருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து காட்டையும் காப்பாற்ற முடியும். தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் மலை வாழ் கிராம மக்களுக்கு முழுமையாக சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us