முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய ஐகோர்ட் இடைக்காலத் தடை
முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய ஐகோர்ட் இடைக்காலத் தடை
முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய ஐகோர்ட் இடைக்காலத் தடை
ADDED : செப் 06, 2011 10:36 PM
சென்னை: கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் பதிவு செய்த வழக்கில், தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் தனசேகரனை கைது செய்ய, சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் தனசேகரன்.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஐகோர்ட்டில் தனசேகரன் தாக்கல் செய்த மனு: கோவையில் உள்ள கேயெஸ் மெர்க்கன்டைல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக, 25 லட்ச ரூபாயை சசிரேகா என்பவரிடமும், 25 லட்சத்தை சுதர்சன் என்பவரிடமும் கொடுத்தேன். பல்வேறு நபர்களிடம் இருந்து, இந்த 50 லட்ச ரூபாயை பெற்றேன். முதலீடு செய்யும் நோக்கில், அவர்கள் இந்தப் பணத்தை என்னிடம் கொடுத்தனர். பிக்சட் டிபாசிட் ரசீதுகள், தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என, சசிரேகா, சுதர்சன் கூறினர். அதை நம்பி, முதலீடு செய்யப்பட்டது. இவர்கள் இருவரும், பொய்யான வாக்குறுதி அளித்து, பணத்தைப் பெற்று மோசடி செய்திருப்பதாக, எனக்குத் தெரிய வந்தது. உடனே, அவர்களைத் தொடர்பு கொண்டு பணத்தைக் கொடுக்கும்படி கேட்டேன். 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை, சசிரேகா கொடுத்து விட்டார். சுதர்சன் கொடுக்கவில்லை. கோவை மாவட்டம், அன்னூரில் உள்ள ஏழு ஏக்கர் நிலத்தை எழுதி வைப்பதாகக் கூறினார். நானும் ஒப்புக் கொண்டேன். அதன்படி, விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது.
பின், இந்தச் சொத்தை விற்று, மற்றவர்களுக்கு 50 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுத்தேன். சசிரேகா, சுதர்சனத்திடம் இருந்து கணிசமான தொகையை நான் பெற்றதாகக் கூறி, என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். இவ்வழக்கில், முன் ஜாமின் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதி வாசுகி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பான டைரியை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டார்.