ஜாமின் மனு டிஸ்மிஸ்: அமர் சிங் மீண்டும் கைது?
ஜாமின் மனு டிஸ்மிஸ்: அமர் சிங் மீண்டும் கைது?
ஜாமின் மனு டிஸ்மிஸ்: அமர் சிங் மீண்டும் கைது?

புதுடில்லி : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், கைது செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி., அமர் சிங்கின், வழக்கமான ஜாமின் மனு மற்றும் இடைக்கால ஜாமின் மனுவை, டில்லி கோர்ட் நேற்று டிஸ்மிஸ் செய்தது.
கடந்த 2008ல், பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, பா.ஜ., எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்த புகாரில், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான அமர் சிங், கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்டார்.
டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, கடந்த 12ம் தேதி திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன் உடல் நிலையை காரணம் காட்டி, இடைக்கால ஜாமின் அளிக்கும்படி, டில்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரின் உடல் நிலை குறித்த, மருத்துவ அறிக்கையைப் பெற்ற கோர்ட், அவருக்கு இடைக்கால ஜாமின் அளித்து உத்தரவிட்டது.
இந்த இடைக்கால ஜாமின் நேற்றுடன் முடிவடைந்தது. தற்போது அமர் சிங் உடல் நிலை நன்றாக உள்ளதாகவும், இருப்பினும் அவரது உடல் நிலை கண்காணிக்கப்பட வேண்டும் என, எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை படித்த நீதிபதி சங்கீதா, இடைக்கால ஜாமின் மற்றும் வழக்கமான ஜாமின் மனுக்களை நிராகரித்தார். இடைக்கால ஜாமினுக்கு அளித்த ஆவணங்களையும் அமர் சிங்கிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, அமர் சிங் மீண்டும் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
திகார் சிறையில் 'மாஜி'க்களை சந்தித்த அத்வானி : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ஜ., முன்னாள் எம்.பி.,க்கள் மகாவீர் பாகோரா, குலாஸ்தே மற்றும் அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுசீந்திர குல்கர்னி ஆகிய மூன்று பேரையும், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து, நலம் விசாரித்தனர்.
இதன் பின் ஜெட்லி கூறுகையில், ''லஞ்சம் கொடுத்தவருக்கும், அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நபருக்கும் வித்தியாசம் உள்ளது. இருவரையும் ஒன்றாக நடத்தக் கூடாது. கைது செய்யப்பட்ட பா.ஜ., உறுப்பினர்கள் மூவரும் அப்பாவிகள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முறைகேட்டை வெளிப்படுத்தியது தான் அவர்கள் செய்த ஒரே தவறு,'' என்றார்.