Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அரசு உயர்நிலைபள்ளி தரம் உயர்த்தப்படுமா?:ஏக்கத்தில் மாணவர்கள்

அரசு உயர்நிலைபள்ளி தரம் உயர்த்தப்படுமா?:ஏக்கத்தில் மாணவர்கள்

அரசு உயர்நிலைபள்ளி தரம் உயர்த்தப்படுமா?:ஏக்கத்தில் மாணவர்கள்

அரசு உயர்நிலைபள்ளி தரம் உயர்த்தப்படுமா?:ஏக்கத்தில் மாணவர்கள்

ADDED : ஆக 19, 2011 04:12 AM


Google News

ஆவடி:கடந்த 45 ஆண்டுகளாக இயங்கி வரும் அரசு பள்ளி தரம் உயர்த்தப்படாததால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சென்னை ஆவடி திருமுல்லைவாயில் அருகே, சத்தியமூர்த்தி நகரில் கடந்த 1966ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது.

இப்பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக்கல்வி இருந்தும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து, தற்போது 374 பேர் மட்டுமே படிக்கின்றனர்.



39, 501 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பள்ளி வளாகத்தில் 10 ஆயிரம் சதுர மீட்டர் அளவிற்கு விளையாட்டு மைதானம் உள்ளது.தளம் அமைந்த ஐந்து கட்டடங்களில் மொத்தம் 16 வகுப்பறைகள் உள்ளன. ஆய்வகம் மற்றும் நூலக வசதியுடன் சொந்தக் கட்டடத்தில் இயங்கும் இப்பள்ளி இன்று வரை உயர்நிலைப்பள்ளியாகவே (10ம் வகுப்பு) இருக்கிறது.இங்கு திருமுல்லைவாயில்,கோவில்பதாகை, வீராபுரம்,மோரை, சத்தியமூர்த்தி நகர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள ஏழை மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.



கடந்த காலங்களில் இங்கு படித்த பல மாணவ, மாணவியர் மேல்நிலைக்கல்வியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும், எங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, இப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டுமென்று, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளியின் மூலம், கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்தனர். அதற்காக கடந்த (2010ம்) ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் செலுத்தினர்.



ஆனால், இன்று வரை அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பெற்றோர் புலம்புகின்றனர்.இந்த ஆண்டு 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசு அறிவித்த பட்டியலில் ஆவடி அரசு உயர்நிலைப்பள்ளி இடம்பெறவில்லை. இதனால், பெற்றோரும், ஆசிரியர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.இதுகுறித்து பேசிய பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி ஒருவர், 'எங்களது பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என முறைப்படி விண்ணப்பித்து, அதற்கான தொகையையும் கட்டியுள்ளோம். ஆனால், தொகை செலுத்தாத ஜே.ஜெ. நகர், மாதவரம் பள்ளிகளை தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.



பள்ளி கல்வித்துறையின் இந்த பாரபட்சம் எங்களுக்கு வேதனையைத் தருகிறது' என்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சித்ரா மற்றும் பள்ளியின் பழைய மாணவ, மாணவியர் கூறியதாவது: இப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். கடந்த காலங்களில் மேல் நிலைக்கல்வி கற்க ஆர்வம் இருந்தும், மேற்கண்ட பிரச்னையால் பல மாணவியர் படிப்பை தொடர முடியாமல், பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.



இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் 5 முதல் 8 கி.மீ., தூரத்தில் உள்ள ஆவடி, காமராஜ் நகர் மற்றும் அம்பத்தூரில் உள்ள மேல் நிலைப்பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால், அங்குள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகளில் 10 ஆயிரம் ரூபாய் வரை கல்விக்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.



குடிநீர் தொட்டிகள் இருந்தும் அதில் மாணவ, மாணவியருக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை. கழிவறை வசதியும் இல்லை. இதனால், மாணவியர் மிகவும் அவதிப் படுகின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் ஒரு கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்துள்ளது. ஒரு சில கட்டடங்களுக்கு அருகில் செடி, கொடி வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.



விளையாடும் போது அல்லது இயற்கை உபாதையை கழிக்க மறைவிடங்களில் ஒதுங்கும் மாணவ, மாணவியர் புதர்களில் உள்ள வண்டு, பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, மேற்கண்ட பிரச்னைகளை சீரமைத்து, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



அ.ஜமால் மொய்தீன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us