ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுதலை பெற்றாலும், அவர்கள் ஏற்படுத்திய பழக்கவழக்கங்கள், அவர்களது கலாச்சாரத்தின் தாக்கம் ஆகியன இருந்து கொண்டு தான் இருக்கின்றன.
அவற்றில் ஒன்று தான் லேடீஸ் கிளப்.
'லேடீஸ் கிளப்புக்குச் செல்லும் பெண்கள் தீவிர பெண்ணியம் பேசிக் கொண்டு யாரையும் மதிக்காமல் இருப்பார்கள்; வீட்டைப் பராமரிக்க மாட்டார்கள்' என்ற அடையாளம் தான் நிலவுகிறது. ஆனால் லேடீஸ் கிளப் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் வேறு.
விதவிதமான உடைகள், வித்தியாசமான வேனிட்டி பேக்ஸ் என, பிரஞ்சு நாகரிகத்தை வேகமாக பின்பற்றி வந்த இங்கிலாந்து பெண்கள், லேடிஸ் கிளப் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்தியாவில் இங்கிலாந்து ஆதிக்கம் அதிகமான போது, பல ஆங்கிலேய அதிகாரிகளும், பிரபுக்களும் தங்கள் குடும்பத்துடன் இந்தியாவில் குடியேறத் துவங்கினர். இங்கிலாந்தில் இருந்து வந்த பெண்கள், இங்கும் லேடீஸ் ரெக்ரீயேஷன் கிளப் அமைக்க வேண்டும் என, நினைத்தனர். அந்த நீண்ட நாளைய ஆசைக்கு, வடிவம் கொடுத்தார் திருமதி மேடலி. சென்னை கார்ப்பரேஷனுக்கு இன்ஜினியராக நியமிக்கப்பட்டு பணி நிமித்தமாக இங்கு குடியேறிய அதிகாரியின் மனைவி தான் மேடலி.
1911ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேடலி, அப்போதைய மெட்ராசின் புகழ்பெற்ற வக்கீல் சர் வி.பாஷ்யம் ஐயங்காரின் மகளும் திரு.சி.ஆர்.திருவேங்கடாச்சாரியாரின் மனைவியுமான திருமதி சீதாம்மாள் திருவேங்கடாச்சாரியார் ஆகியோர் இணைந்து எல்.ஆர்.சி., (Ladies Recreation Club) ஆரம்பித்தனர். ஆங்கிலேயப் பெண்களுக்கும் இந்தியப் பெண்களுக்கும் இடையே சுமூகமான சமூக நட்புறவை ஏற்படுத்தும் பொருட்டு லேடீஸ் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து தரப்பட்ட பெண்களும் இந்த லேடீஸ் கிளப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.