ADDED : செப் 14, 2011 01:19 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே, முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு, இரு நாட்களாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன், நேற்று விடுதலை செய்யப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சிக்குச் செல்லவிருந்த, ஜான் பாண்டியன் உள்ளிட்ட 22 பேரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செப்., 11ம்தேதி காலை, தூத்துக்குடி, வல்லநாட்டில் போலீசார் கைது செய்து, போலீஸ் துப்பாக்கி சுடுதளத்தில் காவலில் வைத்தனர்.நேற்று முன்தினம், 17 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஜான் பாண்டியனை போலீசார் விடுவிக்கத் தயாராக இருந்தபோது, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த, பரமக்குடி செல்ல இருப்பதாக அவர் கூறியதால், பிரச்னை ஏற்படுமெனக் கருதி, அவர் உள்ளிட்ட ஐந்து பேரை மட்டும் தொடர்ந்து காவலில் வைத்தனர். அதேநேரம், ஜான் பாண்டியன் சட்ட விரோத போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 6.30 மணிக்கு, ஜான் பாண்டியன் உள்ளிட்ட ஐந்து பேரையும், போலீசார் திடீரென விடுதலை செய்தனர். இதையடுத்து, வல்லநாட்டிலிருந்து அவர்கள், நெல்லை புறப்பட்டுச் சென்றனர்.