Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு : கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம்

குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு : கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம்

குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு : கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம்

குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு : கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம்

ADDED : ஆக 17, 2011 01:45 AM


Google News

தாம்பரம் : சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 2,556 மில்லியன் கன அடி நீர் கூடுதலாக இருப்பு உள்ளது.

அடுத்து வருவது மழைக்காலம் என்பதால், அடுத்தாண்டு கோடையிலும், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் சென்னை நகரின் குடிநீர் தேவையை தீர்த்து வருகின்றன. இந்த நீர் ஆதாரங்களில் தற்போதைய நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இருந்ததைக் காட்டிலும், இந்த ஆண்டு 2,556 மில்லியன் கன அடி நீர் கூடுதலாக உள்ளது. இதுகுறித்து மெட்ரோ வாட்டர் அதிகாரி ஒருவர், ''தற்போது கிருஷ்ணா நீர் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களில் இருந்து, நாள் ஒன்றுக்கு 135.05 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் அக்டோபரில் துவங்க உள்ள மழைக் காலத்தில் நீர் வரத்து அதிகமாகும். அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையான நீர் இருப்பு உள்ளது.



மழைக் காலத்திற்கு பின் போதிய அளவு நீர் இருப்பு இருக்கும் என்பதால், அடுத்தாண்டு கோடையிலும் சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது,'' என்றார். கைகொடுக்குது வீராணம், கிருஷ்ணா நீர்: கடந்த 2002, 2003 ஆண்டுகளில் மழை பொய்த்ததால், சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. புறநகர் பகுதிகளில் உள்ள விவசாய மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து, லாரிகள் மூலம் நீர் எடுத்து வரப்பட்டு சமாளிக்கப்பட்டது. சென்னை நகரில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, புதிய வீராணம் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். நெய்வேலி அருகில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து நீர் எடுத்து, அருகில் உள்ள வடக்குத்து நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, 200 கி.மீ., தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு, சென்னைக்கு தினசரி 180 மில்லியன் லிட்டர் நீர் கொண்டு வரப்படுகிறது.



அதேபோல், எம்.ஜி.ஆரின் முயற்சியால் செயல்படுத்தப்பட்ட தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் கிடைக்கிறது. இந்த இரண்டு திட்டங்கள் தான் இன்றைக்கும் சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க பெரிதும் உதவுகின்றன. சென்னை நகரின் ஒரு நாளைய குடிநீர் தேவை 1,200 மில்லியன் லிட்டர். இந்த தேவையை பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நீர்நிலைகளில் இருந்தும், புதிய வீராணம் திட்டம் மற்றும் கிருஷ்ணா நதி நீர் திட்டம் ஆகியவற்றை கொண்டுப் பூர்த்தி செய்யப்படுகிறது.

புதிய வீராணம் திட்டத்தில் இருந்து தினசரி 180 மில்லியன் லிட்டரும், தெலுங்கு கங்கை திட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 12 டி.எம்.சி., நீரும் கிடைக்கிறது. பூண்டி நீர்த்தேக்கத்தில் 3,231, புழல் நீர்த் தேக்கத்தில் 3,300, செம்பரம்பாக்கம் நீர்த் தேக்கத்தில் 3,645 மில்லியன் கன அடி நீரும் சேகரிக்க வசதியுள்ளது. சென்னை நகரின் பெரும்பாலான குடிநீர் தேவையை இந்த ஏரிகளே சமாளிக்கின்றன. மழைக் காலத்தில் இந்த நீர் நிலைகளில் சேகரிக்கப்படும் நீர், ஆண்டு முழுமைக்கும் பயன்படுத்தப்படுகிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us