இசையால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இசையால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இசையால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : ஆக 17, 2011 02:45 AM
ஈரோடு:சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை, இன்னிசை மூலம் உருவாக்கும் பிரச்சாரம் துவங்கியுள்ளது.
ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடக்கும் இப்பிரச்சாரத்தை, ஈரோடு 'குறிஞ்சி' பார்வையற்றோர் இன்னிசைக் குழுவினர் துவக்கினர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய இப்பிரச்சார வாகனத்தை, கலெக்டர் காமராஜ் கொடியசைத்து வைத்து துவக்கி வைத்தார்.
கிளைச்சாலையில் இருந்து பிரதான சாலையில் நுழையும் முன் நில், கவனி, செல் என்ற விதியை கடைபிடிப்போம். வாகன இயக்கத்தில் மாறுதல் செய்யும்போது பகல் நேரத்தில் கை சைகையையும், இரவு நேரத்தில் இண்டிகேட்டரையும் பயன்படுத்த வேண்டும்.
மது அருந்தியும், ஃபோனில் பேசியபடியும், சாலை ஓரமுள்ள படக்காட்சிகளை கவனித்தபடியும் வாகனம் ஓட்டக்கூடாது. தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
அதிகபாரம், அதிக வேகத்துடன் செல்லக்கூடாது என, பல்வேறு விதிமுறைகளை கொண்ட, துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்த பாடல்களை, எம்.ஜி.ஆர்., பாடல்கள் மெட்டிலேயே, இன்னிசைக்குழுவினர் பாடினர்.
வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்வேலன், ''நாளை வரை இக்குழுவினர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில் பிரச்சாரம் செய்வர். முதல்நாள் ஈரோட்டிலும், இன்று பெருந்துறையிலும், மூன்றாம் நாள் கோபியிலும் இன்னிசை பிரச்சாரம் செய்வர்,'' என்றார்.
டவுன் டி.எஸ்.பி., தனபால், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் பெருந்துறை வெங்கடேஷ், ஈரோடு ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.