தமிழகம் முழுதும் 500 கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம்! இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது
தமிழகம் முழுதும் 500 கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம்! இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது
தமிழகம் முழுதும் 500 கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம்! இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது
UPDATED : ஆக 17, 2011 01:28 AM
ADDED : ஆக 17, 2011 12:08 AM

தென் மாநிலங்களில், லாரிகள் இயக்க நிறுத்தப் போராட்டம், இன்று நள்ளிரவு முதல் துவங்குகிறது. இதை ஒட்டி, சரக்கு ஏற்றுவதற்கான முன் பதிவு, மூன்று நாட்கள் முன்னதாகவே துவங்கி விட்டதால், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், தமிழகத்தில் தேக்கமடைந்துள்ளன.தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு பரிமாற்றத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.
விலை உயர்வு, அளவுக்கு அதிகமான வரி விதிப்பு ஆகியவை காரணமாக, லாரிகளை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படுவதாக, லாரி உரிமையாளர்கள் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். அவ்வப்போது, மத்திய அரசிடமும் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் முழுவதையும் அரசு நிறைவேற்றுவதில்லை எனக் கூறி, தற்போது பெரிய அளவில் போராட்டம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தைக் காரணம் காட்டி, தமிழகத்துக்கு பொருட்களை எடுத்து வரும் பணி, முற்றிலும் தடைபட்டுள்ளது. இன்று நள்ளிரவு போராட்டம் துவங்கி, தொடரும் பட்சத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நேற்று, தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களை பரிமாற்றம் செய்ய மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, தமிழக போக்குவரத்து துணை கமிஷனர் முருகையா, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில், தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி, துணைச் செயலர் மோகன், பொருளாளர் சென்னகேசவன் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், 'திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்' என, லாரி உரிமையாளர்கள் தெரிவித்து விட்டனர்.
சென்னகேசவன் கூறியதாவது: பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. மத்திய அரசின் கவனத்தை, எங்கள் மீது ஈர்ப்பதே எங்கள் நோக்கம். மகாராஷ்டிரா, தமிழக லாரிகள் போராட்டம் மேற்கொண்டால், நாடு முழுவதுமே சரக்கு பரிமாற்றம் தடைபடும். எங்கள் தொழிலை காப்பாற்றும் வகையில், நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று நம்புகிறோம். நடவடிக்கை இல்லையெனில், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, எங்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவர்கள் கூடி முடிவு செய்வர்.- நமது சிறப்பு நிருபர் -