ADDED : ஜூலை 26, 2011 11:06 PM
திட்டக்குடி : திட்டக்குடியில் குடிபோதையில் வங்கி ஏ.டி.எம்., மெஷின் உடைத்து சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி தொழுதூர் மெயின் ரோட்டில் இந்தியன் வங்கியின் முன்புறம் ஏ.டி.எம்., உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு வங்கி அலாரம் ஒலித்தது. அப்போது அதே பகுதியில் பால் கடை வைத்திருக்கும் ஜெயக்குமார் சென்று பார்த்தார். அங்கு வங்கி ஏ.டி.எம்., கதவு மற்றும் மெஷின் உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷன் மற்றும் வங்கி மேலாளர் அனில்குமார், உதவியாளர் ராஜேந்திரனுக்கும் தகவல் தெரிவித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ரங்கநாதன் மற்றும் போலீசார் வங்கிக்குச் சென்று பார்வையிட்டு ஏ.டி.எம்., மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்தனர். அதில் திட்டக்குடி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த அண்ணாமலை மகன் ஆனந்த், 28; என்பவர் ஏ.டி.எம்., மெஷினை உடைப்பது தெரியவந்தது. போலீசார் ஆனந்த்தைப் பிடித்து விசாரித்ததில் குடிபோதையில் உடைத்தது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்தனர்.