Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பார்த்தீனியம் செடி களையெடுப்பு பணி துவக்கம்!

பார்த்தீனியம் செடி களையெடுப்பு பணி துவக்கம்!

பார்த்தீனியம் செடி களையெடுப்பு பணி துவக்கம்!

பார்த்தீனியம் செடி களையெடுப்பு பணி துவக்கம்!

ADDED : ஆக 20, 2011 11:32 PM


Google News
கோவை:'பார்த்தீனியம் செடிகள்' நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை, கொஞ்சம் கொஞ்சமாக அரித்து கொண்டிருக்கும் படர் கிருமிகள். இதை ஒழித்துக்கட்ட சேவை குணம் கொண்ட அனைவரும், வேளாண் துறையோடு ஒன்றி செயல்பட வேண்டும், என தமிழக வேளாண் துறை அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டார்.தமிழக வேளாண் துறை சார்பில், பார்த்தீனியம் களை ஒழிப்பு முகாம், கோவை அரசூரில் நேற்று முதன் முதலாக துவங்கியது.கோவை வேளாண் இணை இயக்குனர் இளங்கோ வரவேற்றார். கலெக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். தொழில் துறை அமைச்சர் வேலுமணி, ஊரக தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு முன்னிலை வகித்தனர். வேளாண் துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.அவர் பேசியது:பார்த்தீனியம் செடிகள் இந்தியாவின் பாரம்பரிய தாவரங்கள் அல்ல; 1956ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்தபோது, நம் நாட்டிற்கு வந்திறங்கியது. அன்று ஆரம்பித்த பரவல், இன்று தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் ஹெக்டர் பரப்பளவிற்கு மேல் வேளாண் நிலங்களில் பரவி, நமது மொத்த உற்பத்தியில் 30 சதவீதத்தை ஏதோ ஒரு விதத்தில் பாதித்து வருகிறது.

ஒரு செடியில் ஆயிரத்திற்கும் மேல் விதைகள் உருவாகின்றன. இந்த விதைகள் எளிதில் அழிவதில்லை. ஆகவே, காற்றில் பறந்து பரவுகிறது. இச்செடிகள் வளர்ந்து, அதன் பூக்கள் வெளிவிடும் மகரந்த துகள்கள் மனிதர்களுக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆஸ்துமா, மேல் தடிப்பு, ஒவ்வாமை போன்ற தொற்றுகள் இதிலிருந்து பரவுகின்றன. ஒரு பார்த்தீனியத்திலிருந்து 3 லட்சம் முதல் 6 லட்சம் வரையிலான மகரந்த துகள்கள் வெளிப்படுகின்றன.கால்நடைகள் இவற்றை எப்போதாவது உண்டு விட்டால், அவற்றிற்கு குடல்புண், ஒவ்வாமை, பசியின்மை மற்றும் எடை குறைதல் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.இச்செடிகளை அழிக்க நமது வேளாண் துறை பல்வேறு ஆராய்ச்சிகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் வேளாண் துறையோடு விவசாயிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால், இந்த நச்சை நாட்டை விட்டு ஒழிக்கலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.அமைச்சர் வேலுமணி பேசுகையில்,''இந்த விஷச்செடி,கோவை மாவட்டத்தில் மட்டும் 800 ஹெக்டர் பரப்பளவில் பரவியுள்ளது. பரவாமல் தடுக்க, ஒரு லிட்டர் தண்ணீருடன் 200 கிராம் உப்பு மற்றும் 1 மி.லி., ஒட்டும் திரவம் கலந்து தடுப்பு மருந்து தயாரித்து செடிகளில் அடிக்கலாம். இதில் சோப்பு நீர் கரைசலையும் கலந்து தெளிக்கலாம்'' என்றார்.அமைச்சர் சண்முகவேலு பேசுகையில்,''தமிழக அரசு பார்த்தீனியம் செடிகளை அழிக்க நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்த, தற்போது திட்டமிட்டுள்ளது. அரசு திட்டமிட்டாலும், பொதுமக்கள் பங்களிப்பில்லாமல் இதை அழிக்க முடியாது,'' என்றார்.அமைச்சர்கள் பார்த்தீனியம் செடிகளை ஒழிக்கும் பணிகளை துவக்கி வைத்தனர். அவர்களுடன் எம்.எல்.ஏ.,கள் மலரவன், துரைசாமி, சின்னராஜ், ஆறுக்குட்டி, தினகரன், வேளாண் துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் வேளாண் பல்கலை, பேரூர் தமிழ் கல்லூரி, பி.எஸ்.ஜி., ஜி.ஆர்.டி., என்.ஜி.பி., கல்லூரி மாணவ, மாணவியர் இணைந்து நச்சு செடிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.களத்தில் அமைச்சர்கள்: பார்த்தீனிய செடிகளை அழிக்கும் ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்த, நேற்று அமைச்சர்கள் வேலுமணி, செங்கேட்டையன், சூலூர் தொகுதி எம்.எல்.ஏ., தினகரன் ஆகியோர், தங்கள் தோல்களில் மருந்தடிக்கும் இயந்திரங்களை மாட்டிக்கொண்டு, வயலில் இறங்கி மருந்தடித்தனர். செடிகளை ஒழிக்கும் முறைகள்:பார்த்தீனியம் களை ஒழிப்பு முகாமில், நான்கு கலாச்சாரங்கள் மூலமாக பார்த்தீனியம் செடிகளை ஒழிக்கலாம் என வேளாண் அதிகாரிகள் கூறினர்.அவை, செடிகளை பிடுங்கி எரித்தல்: செடிகள் பூக்கும் முன், கையுறை அணிந்து அவற்றை பிடுங்கி எரிப்பதன் மூலம் விதைகள் பரவுவது தடுக்கப்படுகிறது.பயிர் சுழற்சி முறை: செவ்வந்தி பயிரினை பயிர் சுழற்சி முறையில்பயிரிட்டு பார்த்தீனிய களைகளை கட்டுபடுத்தலாம்.மாற்றுப்பயிர் முறை: இச்செடி அதிகம் வளரும் இடங்களில், வேறு சில பயிர்களான அடர் அவரை மற்றும் துத்திச் செடிகளை வளர செய்வதன் மூலம் கட்டுபடுத்தலாம்.நிலப்போர்வை முறை: காய்ந்த பார்த்தீனியம் அல்லாத செடிகளை நிலத்தில் பரப்பி வைப்பதன் மூலமாகவும் தடுக்கலாம் எனவும், தரிசு மற்றும் பயிரிடப்படாத நிலங்களில் களை கொல்லிகளை பயன்படுத்தலாமென்றும், வேளாண் துறை சார்பில் கூறப்பட்டது.வண்டுகள் மூலம் அழிக்கும் முறை: பார்த்தீனிய செடிகளை தின்று அழிக்கும், மெக்சிகோவலிருந்து கொண்டு வரப்பட்ட சைக்கோகிரம்மா பைக்கலரேட்டா என்ற வகை வண்டுகளை, ஏக்கருக்கு 600 என்ற கணக்கில் விட்டால், நச்சு செடிகளை அது அழித்து விடும். இது விவசாய பயிர்களை திண்ணாது. சூரியகாந்தி பயிரிட்டுள்ள விளைநிலங்களில் மட்டும் இவற்றை விடக்கூடாது, என வேளாண் பல்கலை விளக்கியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us