Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாஜி மந்திரி ஆறுமுகத்திடம் 150 கேள்விகள் : போலீஸ் விசாரணை தொடர்கிறது

மாஜி மந்திரி ஆறுமுகத்திடம் 150 கேள்விகள் : போலீஸ் விசாரணை தொடர்கிறது

மாஜி மந்திரி ஆறுமுகத்திடம் 150 கேள்விகள் : போலீஸ் விசாரணை தொடர்கிறது

மாஜி மந்திரி ஆறுமுகத்திடம் 150 கேள்விகள் : போலீஸ் விசாரணை தொடர்கிறது

ADDED : ஜூலை 27, 2011 12:54 AM


Google News
Latest Tamil News
சேலம் : சேலம், அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு, பிரிமியர் ரோலர் மில் வழக்குகளில் சிக்கி சரணடைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம், நேற்று இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று, கிட்டத்தட்ட 150 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது.சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, நேற்று முன்தினம் காலையில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீசில் சரணடைந்தார். அவருக்கு ராஜமரியாதை வழங்கியதுடன், விசாரணை அதிகாரிகள் விசுவாசத்தைக் காட்டினர்.இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், நேற்று கூடுதலாக விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இரண்டாவது நாளான நேற்று, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்ப்பதற்கு, காலை, 9.25 மணிக்கு, ராஜ்யசபா எம்.பி., ராமலிங்கம் வந்தார். ஆனால், போலீசார் அனுமதி மறுத்தனர்.இரண்டாம் நாளான நேற்று, துணை கமிஷனர் ரவீந்திரன் தலைமையில், இரண்டு உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் ஒருவரும், 200 கேள்வித் தயாரிப்புடன் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, அவர் கூறிய பதில்களுக்கு, சில கேள்விகளுக்கு ஆதாரங்களை சுட்டிக்காட்டி கேட்கத் துவங்கினர். நேற்று முன்தினம் விசாரணையின் போது, 10 நிமிடத்துக்கு ஒரு முறை, முன்னாள் அமைச்சருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று, 20 நிமிடத்துக்கு ஒரு முறை தான் ஓய்வு வழங்க அனுமதிக்கப்பட்டது. அத்துடன் இரண்டு மணி நேர இடைவெளியில், அரசு டாக்டர்களின் பரிசோதனைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.விநாயகா மிஷன் டாக்டர்களின் சோதனை, ஆம்புலன்ஸ் ஆகியவற்றுக்கு நேற்று அனுமதி வழங்கப்படவில்லை. நேற்று முன்தினம் இரவு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்ட நிலையில், இரவில் அவருக்கு அலர்ஜி ஏற்பட்டது. ஏற்கனவே இவருக்கு, 'எக்ஸிமா' என்னும் தோல் நோய் உள்ளது.

இந்நிலையில், புதிய இடத்தில் தங்கியதால் அந்நோயின் தாக்கம் இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அரசு மருத்துவமனையின் தோல் டாக்டர் ஸ்ரீராம் வரவழைக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை, லெட்சுமி ஓட்டலில் இருந்து இரண்டு இட்லி, இரண்டு தோசை, சட்னி, சாம்பார் வழங்கப்பட்டது. மதியமும் அதே ஓட்டலில் இருந்து சாப்பாடு, முள்ளங்கி சாம்பார், புளிக்குழம்பு, ரசம், தயிர், அவியல், கீரை கூட்டு, பீட்ரூட் பொரியல், மோர், ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றை வழங்கினர். நேற்று மாலை 4 மணி வரை நடத்தப்பட்ட விசாரணையில், 150 கேள்விகள் வரை, விசாரணை அதிகாரிகளால் கேட்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியாது, ஞாபகம் இல்லை என, வீரபாண்டி ஆறுமுகம் பதில் தெரிவித்துள்ளார். முன்னாள் இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் குறித்த கேள்விகளுக்கு, பதில் கூற முடியாமல் திணறி உள்ளார். இவ்வாறு, திணறலான கேள்விகள் கேட்கப்பட்ட போது, உடல் பாதிப்பை காட்டி ஓய்வு கேட்டுள்ளார். இருந்த போதிலும் அதிகாரிகள், விசாரணையை துரிதப்படுத்தும் வகையில் அவசரப்படுத்தியதால், கேள்விகளுக்கு பதில் அளிக்க முன்வந்துள்ளார். மாஜிக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரிகள், விசாரணையின் போது பாதுகாப்புப் பணி என்ற பெயரில், விசாரணை அறையை சுற்றிச் சுற்றி வந்தனர்.

விசாரணை அதிகாரி மாற்றம், விசாரணையில் கண்டிப்பு ஆகியவற்றை அதிகாரிகள் கடைபிடித்தாலும், குற்றவாளி பட்டியலில் உள்ளவர் பாரப்பட்டி சுரேஷக்குமார். ஆனால், உறவினர் மட்டுமின்றி, தேடப்படும் குற்றவாளி பட்டியலில் உள்ள சுரேஷ்குமாரின் சகோதரரும் அங்கு அனுமதிக்கப்பட்டது, சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மேலும் வழக்குகள் : சேலம், அங்கம்மாள் காலனி நில விவகார வழக்கு, ப்ரீமியர் ரோலர் மில் வழக்குகளில் சிக்கி, போலீஸ் விசாரணை வளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது குவிந்துள்ள புகார்களை, தற்போது போலீசார் தூசு தட்டத் துவங்கியுள்ளனர். இன்று ஜாமினில் வெளிவரவுள்ள வீரபாண்டி ஆறுமுகம் மீது, மேலும் பல வழக்குகள் பாயும் என, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தையே உலுக்கிய ஆறு பேர் கொலை வழக்கு விசாரணையில், முன்னாள் அமைச்சரின் தலையீடு இருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகார்களும், தற்போது போலீசாரால் தூசு தட்டப்பட்டுள்ளன. இந்த புகார்கள் அனைத்தின் மீது விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்யும் பணிகள், ரகசியமாக நடந்து வருவதாகத் தெரிகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us