ADDED : அக் 05, 2011 02:11 AM
கோவை : சுந்தராபுரம், சிட்கோ பகுதியில் உள்ள தனியார் இன்டஸ்ட்ரி எஸ்டேட் பகுதியில், தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் கம்பெனியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
சுந்தராபுரம் அரிமளம் காலனியை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு சொந்தமான கட்டடம், சிட்கோ பேஸ் ஒன்று அருகில் உள்ள தனியார் இன்டஸ்ட்ரி எஸ்டேட் பகுதியில் உள்ளது. இந்த கட்டடத்தில், புலியகுளம் பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவர் பிரிண்டிங் செய்வதற்கான பொருட்களையும், மரக்கடையை சேர்ந்த ஜான் என்பவர் பிளக்கிங் லைனர் விற்பனை செய்து வந்தனர். ஆயுத பூஜைக்காக கட்டடம் தூய்மையாக்கப்பட்டு, நேற்று மாலை கட்டடத்தை பூட்டிவிட்டு திரும்பியுள்ளனர். மாலை 6.15 மணியளவில் திடீரென தீ பற்றிக்கொண்டது. கட்டடத்தினுள் கெமிக்கல் பொருட்கள் வைத்திருந்ததால், 6 முறைக்கு மேல் பெரிய சத்தத்துடன் வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் பரவியது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி, தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கட்டடம், கெமிக்கல்ஸ் என, 14 லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இது குறித்து, போத்தனூர் போலீசார் விசாரிக்கின்றனர். இங்கும் ஒரு வண்டி வேண்டும்: நகரத்தில் இருந்து சிட்கோ பகுதிற்கு, தீயணைப்பு வண்டி நகரத்தில் இருந்து வர வேண்டும். உக்கடம், ஆத்துப்பாலம் பகுதியை கடந்து வரவே, பெரும் சிரமப்பட வேண்டும். இதனால், குறிச்சி, குனியமுத்தூர், மதுக்கரை, போத்தனூர் பகுதிகளை 'கவர்' செய்யும் வகையில், சுந்தராபுரத்தில் தனி தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும்.


