Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குடந்தையில் திரியும் 1,425 நாய்களுக்கு கு.க., : நகராட்சியில் ரூ.6.27 லட்சம் ஒதுக்கீடு

குடந்தையில் திரியும் 1,425 நாய்களுக்கு கு.க., : நகராட்சியில் ரூ.6.27 லட்சம் ஒதுக்கீடு

குடந்தையில் திரியும் 1,425 நாய்களுக்கு கு.க., : நகராட்சியில் ரூ.6.27 லட்சம் ஒதுக்கீடு

குடந்தையில் திரியும் 1,425 நாய்களுக்கு கு.க., : நகராட்சியில் ரூ.6.27 லட்சம் ஒதுக்கீடு

ADDED : செப் 20, 2011 11:44 PM


Google News

கும்பகோணம்: கும்பகோணத்தில் சுற்றித் திரியும் 1,425 நாய்களுக்கு கு.க., செய்வதற்கு ரூ.6.27 லட்சம் நகராட்சியால் ஒதுக்கப்பட்டுள்ளது.

நகராட்சியின் அவசர மற்றும் சிறப்பு கூட்டம் நடந்தது. தலைவர் தமிழழகன் தலைமை வகித்தார். கமிஷனர் வரதராஜ் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி எல்லைக்குள் சுற்றித்திரியும் 1,425 தெருநாய்களை பிடித்து தடுப்பூசி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் இனப்பெருக்கத்தை தடை செய்ய ஒரு நாய்க்கு 440 ரூபாய் வீதம் 6 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பாதிப்படைந்த சாலைகளை முதல் கட்டமாக செப்பனிட 54 பணிகளுக்கு 5 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயாரித்து அரசின் நிதி பெற்று செய்யப்படும். சுவர்ண ஜெயந்தி நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 10 லட்சத்து 98 ஆயிரத்து 296 ரூபாய் ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. அதில், கர்ணகொல்லை தெருவில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலையும், ஆணைக்காரன் பாளையம் தெற்கு வள்ளுவன் தெரு மாரியம்மன் கோவில் தெருவை இணைக்கும் இணைப்பு சாலை 3.50 லட்சம் ரூபாயிலும், 29வது வார்டு வீரபத்திர சுவாமி சந்தில் சிமென்ட் சாலை அமைக்க அனுமதிக்கு வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இதையடுத்து கவுன்சிலர்கள் பேசியதாவது: கிருஷ்ணமூர்த்தி: அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் அருகே மக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடம் இருட்டாக உள்ளது. எனவே, அங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். பீட்டர் பிரான்சிஸ்: 25வது வார்டு கொங்கன்னியையும், ஸ்ரீநகர் காலனி காந்தி நகரையும் இணைக்கும் குறுக்கு தெருவில் தெருவிளக்கு இல்லாததால் சமூகவிரோத செயல்கள் நடக்கிறது. எனவே அங்கு உடனே தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

நடராஜன்: குடிநீருக்காக நகராட்சி மாதந்தோறும் அடிக்கடி செலவு செய்து கொண்டிருக்கிறது. ஆனால், 2 வேளையும் தண்ணீர் கொடுக்கவில்லை. அங்கே, இங்கே ரிப்பேர் என்று சொல்லி ஒருவேளைதான் குடிநீர் வருகிறது. உருப்படியாக என்ன செய்தீர்கள்?.

ராஜாராமன்: உறுப்பினர் வரம்பு மீறி தவறாக பேச கூடாது.

பொறியாளர் கனகசுப்புரெத்தினம்: அதிக பயன்பாடு, தேய்மானம் காரணமாக செலவாகிறது.

தலைவர்: காசிராமன் காலத்திற்கு பிறகு கோ.சி.மணி அமைச்சராக இருந்தபோதுதான் தொலைநோக்கு பார்வையுடன் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அ.தி.மு.க., காலத்தில் என்ன செய்தீர்கள்? என்று சொல்லிவிட்டு உறுப்பினர் கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு நகராட்சி கூட்டத்தில் விவாதம் நடந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us