ADDED : செப் 06, 2011 11:01 PM
சென்னை: மாற்று சபாநாயகராக, சட்டசபை இந்திய கம்யூ., தலைவர் குணசேகரன் அமர்ந்தபோது, சபையில் சுவாரஸ்ய விவாதம் நடந்தது.
நேற்று காலை 11.37க்கு, சமூக நலத்துறை மானியத்தில், அ.தி.மு.க., உறுப்பினர் கனிதா சம்பத் பேசிக் கொண்டிருந்தபோது, சபாநாயகர் ஆசனத்தில், மாற்று சபாநாயகராக குணசேகரன் அமர்ந்தார். அமர்ந்த சில வினாடிகளில், 'பெல்'லை அழுத்தி, 'ஒரு நிமிடத்தில் பேச்சை முடியுங்கள்' என்று, உறுப்பினரை கேட்டுக் கொண்டார். உடனே, பா.ம.க., உறுப்பினர் கலையரசன் எழுந்து, 'நீங்கள் (குணசேகரன்) இங்கே (உறுப்பினர்கள் வரிசையில்) உட்காரும்போது, பேசுவதற்கு சபாநாயகரிடம் கூடுதலாக நேரம் கேட்கிறீர்கள். ஆனால், அங்கே சென்றபின், சீக்கிரம் பேச்சை முடியுங்கள் எனக் கூறுகிறீர்கள். இது நியாயமா?' என்றார். இதனால், சபையில் குபீர் சிரிப்பொலி எழுந்தது. அதற்கு, 'இடம் மாறினால், எல்லாம் மாறும்' என்று, மாற்று சபாநாயகர் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.