ADDED : செப் 04, 2011 11:07 PM
திட்டக்குடி : திட்டக்குடியில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பயிற்சி முகாம் நடந்தது.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம் செய்தல், வாக்காளர்களை நீக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட பலர் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் திட்டக்குடியில் நடந்தது. முகாமில் திட்டக்குடி தாசில்தார் சையத்ஜாபர் பேசியதாவது: விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பள்ளி சான்று, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட சான்றுகளை வழங்கலாம். சமீபத்தில் எடுக்கப்பட்ட கலர் புகைப்படம் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். தவறான தகவல் கொடுப்பவர்களின் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 31ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என பேசினார். மண்டல துணை தாசில்தார்கள் கிருஷ்ணமூர்த்தி, பாலு, மகாராணி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.