5 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம்
5 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம்
5 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம்
ADDED : செப் 06, 2011 11:14 PM
சென்னை: ''தற்போது மாத ஓய்வூதியம் பெறும் 24 லட்சம் பேருடன், கூடுதலாக 5 லட்சத்து 36 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுவர்'' என, அமைச்சர் செல்வி ராமஜெயம் கூறினார்.
சமூகநலத் துறை மீது நடந்த விவாதத்துக்கு, அமைச்சர் செல்வி ராமஜெயம் அளித்த பதில்: மூத்த குடிமக்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்குவதற்கென, ஒவ்வொரு வட்டத்திலும், சிறப்பு இல்லங்களை உள்ளடக்கி, ஒருங்கிணைந்த வளாகங்கள் ஏற்படுத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவற்றில், ஆதரவற்ற மூத்த மாற்றுத் திறனாளிகளும் தங்க ஏற்பாடு செய்யப்படும். அனைவருக்கும் உணவும், உடையும் வழங்குவதுடன், பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்படுத்தித் தரப்படும். தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் உதவியுடன், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்தியாவிலேயே, ஓய்வூதியத் தொகையை, ஆயிரம் ரூபாயாக உயர்த்திக் கொடுக்கும், அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலம் வேறு எதுவும் இல்லை. காஷ்மீரில் 325 ரூபாயும், மேற்குவங்கத்தில் 400 ரூபாயும், மகாராஷ்டிராவில் 600 ரூபாயும், கேரளாவில் 300 ரூபாயும், ஆந்திராவில் 200 ரூபாயும் மட்டுமே வழங்கப்படுகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வயது வரம்பை, 60 ஆக குறைத்தால், தமிழகத்தில் தற்போது மாத ஓய்வூதியம் பெற்று வரும் 24 லட்சம் பயனாளிகளுடன், கூடுதலாக 5 லட்சத்து 36 ஆயிரம் ஏழைகளும் மாத ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் பெறுவர். ஓய்வூதியத் திட்டங்களுக்காக, ஆண்டுக்கு 3,700 கோடி ரூபாய் செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெற விரும்புவோர், அந்த கிராமங்களிலேயே, கிராம நிர்வாக அலுவலரிடம் திங்கள்கிழமைதோறும் மனு வழங்கவும், அந்த மனுவை அந்த வார வெள்ளிக்கிழமை தன் அறிக்கையுடன், சமூகப் பாதுகாப்பு தனி தாசில்தாருக்கு அனுப்பவும், அவற்றை மூவர் குழு ஆய்வு செய்து, தகுதியுள்ளவர்களுக்கு விரைவாக ஓய்வூதியம் வழங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசினார்.