பொன்முடி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
பொன்முடி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
பொன்முடி ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
ADDED : செப் 14, 2011 12:12 AM

விழுப்புரம்:நிலமோசடி வழக்கில் கைதாகி, கடலூர் சிறையில் உள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஜாமின் மனு, விழுப்புரம் மாவட்ட கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.
விழுப்புரம் பெரியார் நகர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தினருக்கு சொந்தமான 61 ஆயிரம் சதுரடி காலி இடத்தை, மோசடியாக தனது சிகா பள்ளி அறக்கட்டளைக்கு வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, கூட்டுறவு சங்க செயலர் சாந்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கில் ஜாமின் வழங்க கோரி, பொன்முடி மற்றும் கூட்டுறவு சங்க செயலர் சாந்தி ஆகியோர் சார்பில் தி.மு.க., வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நேற்று முன்தினம் இருவரது ஜாமின் மனு மீதான விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தியாகராஜமூர்த்தி, வழக்கின் தீர்ப்பை மறுநாள் வழங்குவதாக ஒத்தி வைத்திருந்தார்.பொன்முடி, சாந்தி ஆகியோரது ஜாமின் மனுவை முதன்மை மாவட்ட நீதிபதி தியாகராஜமூர்த்தி நேற்று மதியம் தள்ளுபடி செய்தார்.
பரபரப்பு: பொன்முடி ஜாமின் மனு நிராகரிக்கபட்ட பின், நீதிமன்ற வளாகத்திலிருந்து வந்த தி.மு.க., வழக்கறிஞர் கோதண்டம், நீதிபதிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த அரசு வழக்கறிஞர்கள் பொன்சிவா, சன்னியாசி உள்ளிட்டோர் கோர்ட் வளாகத்திற்கு வெளியே சென்று கூச்சலிடுமாறு கூறினர். அப்போது அ.தி.மு.க., - தி.மு.க., வழக்கறிஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.திருவாரூர் போலீஸ் முகாம்: பொன்முடிக்கு ஜாமின் கிடைத்தால், திருவாரூரில் தேர்தல் நன்றி அறிவிப்பு கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்ய, கடந்த 8ம் தேதி மற்றும் நேற்று முன்தினம் காத்திருந்ததை போல, திருவாரூர் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார், நேற்றும் கடலூர் மத்திய சிறை முன் காத்திருந்தனர்.ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட தகவல் அறிந்து, திருவாரூர் போலீசார் திரும்பிச் சென்றனர்.