
ஜனாதிபதியிடம் கருணாநிதி வைத்த கோரிக்கை! ''தொடக்க கல்வித் துறையில, தீவிர வசூல் வேட்டை நடந்துண்டு இருக்கு ஓய்...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''அதிகாரிகள் தான் ஓய்...
''திண்டுக்கல் மாவட்டத்துல நிறைய பேருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டுக் கொடுத்திருக்கா ஓய்... இதைக் கண்டிச்சு, ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தியிருக்கு... சங்க நிர்வாகிகள், மாவட்ட அதிகாரிகள்ட்ட கேள்வி கேட்டா,'நானா செய்யலை... உயர் அதிகாரி சொல்லித் தான் செய்யறேன்'னு, பதில் சொல்றாளாம்...'' என்று விளக்கினார் குப்பண்ணா.
''காரணமாத்தான் தலைவர், குழு அமைக்கச் சொன்னாராம் வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
''எந்தத் தலைவர்; என்ன சொன்னாருங்க...'' என்று கேட்டார் அந்தோணிசாமி.
''நில மோசடி விவகாரத்துல, தி.மு.க., முக்கியத் தலைவர்கள் திடீர் திடீர்ன்னு கைதாகி வர்றதால, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, கட்சிக்காரங்க தயங்கறாங்க வே... 'உட்கட்சிப் பூசல், ஆளுங்கட்சி எதிர்ப்புகளை மீறி ஜெயிக்க முடியுமா, அப்படியே ஜெயிச்சாலும் ஏதாவது பிரச்னையில சிக்க வைச்சுட்டா என்னாகறது'ன்னு, ரொம்ப யோசிக்கறாவ...
''இந்த தகவல் தலைமைக்கு எட்டியதும், இளங்கோவன் எம்.பி., தலைமையில, ஏழு பேர் கொண்ட குழுவை, கருணாநிதி அமைச்சாராம் வே... கட்சிக்காரங்களுக்கு எந்த பிரச்னையா இருந்தாலும், மாநில குழுகிட்ட புகார் அளிக்கலாம்... அவங்க, உடனே உரிய நடவடிக்கை எடுப்பாங்க வே...'' என்றார் அண்ணாச்சி.
''பொண்ணும் பார்த்த மாதிரி இருக்கணும்; மாடும் மேய்ச்ச மாதிரி இருக்கணும்னு கிராமத்துல சொல்லுவாங்களே... அதுமாதிரி தான் நடந்ததாம் பா...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.
''பழமொழி பலமா இருக்கே ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''தி.மு.க., எம்.பி.,க்கள் எல்லாரும், டில்லியில ஜனாதிபதியை நேர்ல சந்திச்சு, மனு கொடுத்தாங்க பா... 'அ.தி.மு.க., ஆட்சி, தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுது'ன்னு, மனுவுல சொல்லிருக்காங்க... ஆனா, உள்ளுக்குள்ள வேற விஷயம் இருக்குன்னு சொல்றாங்க...'' என நிறுத்தினார் அன்வர்பாய்.
''அதென்ன ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''கனிமொழி கைதாகி திகார் சிறையில இருக்காங்க... 100 நாட்களுக்கு மேல அவங்க சிறையில இருக்கறதால, ஜனாதிபதி தன், 'இன்புளூயன்சை' பயன்படுத்தி, கனிமொழிக்கு ஜாமின் கிடைக்க ஏற்பாடு செய்யணும்ங்கற கோரிக்கையை கருணாநிதி சார்பா வைச்சிருக்கறதா சொல்றாங்க பா...'' எனக் கூறிவிட்டு, அன்வர்பாய் புறப்பட, மற்றவர்களும் கிளம்பினர்.