Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூ. 25 கோடி ஆவணங்கள், பணம் பறிமுதல் "ரியல் எஸ்டேட்' அதிபர்கள் வீடுகளில் "ரெய்டு'

ரூ. 25 கோடி ஆவணங்கள், பணம் பறிமுதல் "ரியல் எஸ்டேட்' அதிபர்கள் வீடுகளில் "ரெய்டு'

ரூ. 25 கோடி ஆவணங்கள், பணம் பறிமுதல் "ரியல் எஸ்டேட்' அதிபர்கள் வீடுகளில் "ரெய்டு'

ரூ. 25 கோடி ஆவணங்கள், பணம் பறிமுதல் "ரியல் எஸ்டேட்' அதிபர்கள் வீடுகளில் "ரெய்டு'

ADDED : ஆக 20, 2011 11:29 PM


Google News
கோவை:கோவையில், ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடுகளிலும், திருப்பூரில் பிரபல சீட்டு நிதி நிறுவன அதிபரின் வீடு, அலுவலகத்திலும் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வருமானவரித் துறையின் அதிரடி சோதனை காரணமாக, பிற ரியல் எஸ்டேட் அதிபர்கள் பீதியில் உள்ளனர்.கோவையில் கடந்த 10 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. புதிது, புதிதாக முளைத்துள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்து தனியார் நிலங்களை வளைத்துப் போட்டுள்ளன. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு குடியிருப்பு மனைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இத்தொழிலில் பெரிய அளவிலான முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் சில, தங்களது வருமானக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்ற புகார்கள், வருமானவரித் துறைக்குச் சென்றன.இதையடுத்து, கோவை புறநகரிலுள்ள ஒத்தக்கால்மண்டபம், பிரீமியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த இரு நாட்களுக்கு முன் திடீர் சோதனை நடத்தினர். பகல் முதல் நள்ளிரவு வரை நடந்த சோதனையில், வருமான கணக்கில் காட்டப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தனியார் கல்லூரி அதிபர் வீட்டிலும் இச்சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.இதே போன்று, திருப்பூரிலுள்ள பிரபல சீட்டு நிதி நிறுவன அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளரின் வீடு, அவரது கிளைத்தொழில் நிறுவனங்களிலும் வருமானவரி அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். ஏறத்தாழ 14 மணி நேரம் தொடர்ந்த இந்த சோதனையில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட சீட்டு நிதி நிறுவனம் அரசு பதிவு பெறாமல் 50 லட்சம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஏலச் சீட்டுகளை நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டதாக தெரிகிறது. வருமானவரித்துறையினரின் அடுத்தடுத்த சோதனைகளால் கோவையிலுள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆடிப்போயுள்ளனர். ஒரு சிலர், சோதனை நடவடிக்கைக்கு மிரண்டு சொத்து ஆவணங்கள் மற்றும் பணத்துடன் வெளியூர் சென்று பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் ஒருவர் கூறுகையில், 'வருமான கணக்கு விபரத்தை முறையாக தாக்கல் செய்து, தொழில் நடத்துவோருக்கு எவ்வித அச்சமும் இல்லை. சரிவர கணக்கு சமர்ப்பிக்காத ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிலரது வீடுகளில் சோதனை நடத்திய வருமானவரி அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us