Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் பணி பாதிப்பு!

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் பணி பாதிப்பு!

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் பணி பாதிப்பு!

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் பணி பாதிப்பு!

UPDATED : செப் 13, 2011 05:59 AMADDED : செப் 11, 2011 11:41 PM


Google News
Latest Tamil News
சென்னை:மத்திய அரசின் சலுகைகள் குறைத்தல், நிலம் கையகப்படுத்துதல் பிரச்னையால், தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தொழில் வளங்களை மேம்படுத்தி, வேலை வாய்ப்பினை அதிகரிப்பதற்காகவும், ஏற்றுமதி தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், மத்திய அரசு, கடந்த 2000ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் கொள்கையை உருவாக்கியது.இதற்காக, 2005ம் ஆண்டில், சட்டம் இயற்றப்பட்டு, 2006ம் ஆண்டில் அதற்கான விதிமுறைகளை அறிவித்தது.

இதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க முடிவு செய்தன.இம்மண்டலங்களில் அமைக்கும் நிறுவனங்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு வருமான வரி, கலால் மற்றும் சுங்க வரி விலக்கு என அறிவிக்கப்பட்டது. மாநில அரசு அடிப்படை கட்டமைப்பு வசதி, தண்ணீர், மின்சாரம் போன்றவற்றில் சலுகைகள் வழங்குகின்றன.தற்போது நாட்டில், பல துறைகள் அடங்கிய, 585 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முறைப்படியான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 71 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



தகவல் தொழில்நுட்பம், பொறியியல், பல் பொருள் சிறப்பு பொருளாதாரம், தோல் மற்றும் ஜவுளி பொருட்கள் போன்ற துறைகள் அடங்கும்.சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்துவதன் மூலம், ஏற்றுமதி வர்த்தகம் மட்டுமில்லாமல், அதிகளவில் வேலைவாய்ப்பும் பெருகியுள்ளது. நாட்டின் மனித வளத்தை பயன்படுத்தும் நோக்கில், பன்னாட்டு நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதால், தொழில்நுட்ப அறிவுடன் தொழில்வளர்ச்சியும் ஏற்பட்டு வந்தது.தமிழகத்தில் டிட்கோ, சிப்காட், எல்காட் மற்றும் தனியார் நிறுவனங்கள் பல சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பரவலாக ஏற்படுத்தப்பட்டு வருவதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சி ஏற்படுகிறது. இதன்மூலம், ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிலையில், கடந்தாண்டு, மத்திய அரசு கொண்டு வந்த நேரடி வரி விதிப்பின் மூலம், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், 2014ம் ஆண்டு வரை மட்டுமே சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளதால், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



இதுகுறித்து தமிழக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மேம்படுத்துவோர் அமைப்பின் துணை தலைவர் சரவணன் கூறியதாவது:மத்திய அரசு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கும் சட்டத்தின் படி, அறிவித்த சலுகைகளை தொடர்ந்து வழங்க வேண்டும். 2014ம் ஆண்டு வரை தான் வழங்கப்படும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது. தமிழகத்தில், நிலத்தின் விலை அதிகமாக உள்ளது. நிலத்தை கையகப்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது. இந்த பிரச்னை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது,'மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு, இழப்பீட்டு தொகை அதிகமாக வழங்கப்படுகிறது. தமிழக அரசு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கான அனைத்து உதவிகளையும் சிறப்பான முறையில் செய்து வருகிறது' என்றார்.



தமிழகத்தில் உள்ள சிறப்புபொருளாதார மண்டலங்கள்:டிட்கோ நிறுவனம், தனியாருடன் இணைந்து எண்ணூர், நாங்குநேரி, பெரம்பலூர், ஓசூர், விருதுநகர் ஆகிய இடங்களில், பல் பொருள் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து வருகிறது. மகிந்திரா நிறுவனத்துடன் இணைந்து, மகிந்திரா வேர்ல்டு சிட்டி அமைத்துள்ளது. ஐ.டி., மோட்டார் வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் என, இங்குள்ள தொழிற் நிறுவனங்களில், 25 ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர்.

சிப்காட் நிறுவனம், அதன் தொழில் வளாகங்கள் மற்றும் பூங்காக்களில், குறிப்பிட்ட வகைச் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், ஆகிய இடங்களில் உயர் தொழில்நுட்பவியல், பெருந்துறை மற்றும் ராணிப்பேட்டையில் பொறியியல் துறை, இருங்காட்டுக்கோட்டையில் காலணி மற்றும் தோல் பொருட்கள், கங்கைகொண்டானில் போக்குவரத்து பொறியியல் துறை ஆகிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்துள்ளது.



இதன்மூலம், 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இவைதவிர, செய்யாறில் மோட்டார் உதிரிபாகங்கள், பர்கூரில் கிரானைட் தயாரிக்கும் துறை சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க உள்ளது.

எல்காட் நிறுவனம் சென்னை சோளிங்கநல்லூர், கோவையில் விளாங்குறிச்சி, மதுரையில் இலந்தைகுளம் மற்றும் வடபழஞ்சி கிண்ணிமங்கலம், திருச்சியில் நவல்பட்டு, நெல்லையில் கங்கைகொண்டான், சேலத்தில் ஜாகீர் அம்மாபாளையம், ஓசூரில் விஸ்வநாதபுரம் ஆகிய இடங்களில், தகவல்தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்துள்ளது. இதுதவிர பல தனியார் நிறுவனங்களும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து வருகின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us