/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அழகு மயில்கள் அழிவுக்கு காரணம், அசைவ ஆசை : ஆய்வில் "பகீர்' தகவல்அழகு மயில்கள் அழிவுக்கு காரணம், அசைவ ஆசை : ஆய்வில் "பகீர்' தகவல்
அழகு மயில்கள் அழிவுக்கு காரணம், அசைவ ஆசை : ஆய்வில் "பகீர்' தகவல்
அழகு மயில்கள் அழிவுக்கு காரணம், அசைவ ஆசை : ஆய்வில் "பகீர்' தகவல்
அழகு மயில்கள் அழிவுக்கு காரணம், அசைவ ஆசை : ஆய்வில் "பகீர்' தகவல்
ADDED : அக் 02, 2011 09:09 PM
கோவை : கோவையில் முகாமிட்டுள்ள வட மாநில தொழிலாளர்கள், வார விடுமுறை நாட்களில் மயில்களை வேட்டையாடி சாப்பிட்டு வருவதால், மயில்களின் எண்ணிக்கை சமீபகாலமாக குறைந்து வருவது பள்ளி மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாநில அளவில் நடைபெற்ற போட்டியில், கோவை மாணவர்களின் இந்த ஆய்வுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் 'இன்டெல்' நிறுவனம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள்,'பவர் பாயின்ட்' உதவியுடன், தகவலை விளக்க வேண்டும். சென்னையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் சார்ந்துள்ள பள்ளி மாணவர்களை போட்டிக்கு தயார்படுத்தினர்.
மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் தேர்வு பெற்ற பள்ளிகளுக்கு, மாநில அளவில் சென்னையில் இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. இதில் கோவை ஸ்ரீ கோபால்நாயுடு மேல்நிலைப்பள்ளியின் விக்னேஷ் குமார், மெல்வின் ஜோஸ், சுதர்சன், கன்சால், மோகன்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் முதல் பரிசு பெற்றனர். இப்போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இதே பள்ளி முதல் பரிசு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர் குமரன் கூறியதாவது: 'டெக்னாலஜி இன் எஜூகேஷன் அவார்டு' எனும் இப்போட்டிக்கு, பாடத்தில் உள்ள ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் அறிக்கை தயாரிக்க வேண்டும். மாவட்ட அளவில் பங்கேற்ற ஒன்பது பள்ளிகளில் முதல் பரிசு பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வானோம். 'தேசிய அடையாளம்' எனும் தலைப்பின் கீழ் அறிக்கை தயாரித்தோம்.
நமது தேசிய அடையாளமாக திகழும் யானை, மயில், புலி ஆகிய உயிரினங்களை, 'அழியாமல் பாதுகாப்பது எப்படி' என்பது குறித்து விலாவாரியாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தோம். ஆய்வில், மயிலின் அழிவுக்கான காரணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். பல்வேறு பணிகளுக்காக, கோவையில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்கள், சமீப காலமாக அதிகளவில் மயில்கள் அழிய காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
புறநகர் மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் கூடாரமிட்டு வசித்து வரும் இவர்கள், வார விடுமுறை நாட்களில் விடிந்தால் மயில் வேட்டைக்கு கிளம்பி விடுகின்றனர். அதிக விலை கொடுத்து சிக்கன் வாங்கி சாப்பிட முடியாததால், மயில் கறியை சாப்பிட்டு அசைவ உணவு ஆசையை தணித்துக் கொள்வது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எங்கள் ஆய்வுக்கு 'தினமலர்' நாளிதழின் செய்திகள் உதவியாக இருந்தன,''என்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் கல்வி அலுவலர் கலைவாணி, பள்ளி தலைமை ஆசிரியர் மனோரமா, தாளாளர் ரவி சாம் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


