ADDED : செப் 18, 2011 09:35 PM
பல்லடம் : பல்லடம், சுல்தான்பேட்டை, கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் வீடுகள்
மற்றும் தொழிற்சாலைகள் கட்டுவதற்கு கரூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில்
இருந்து லாரிகள் மூலம் தினமும் மணல் லோடுகள் எடுத்து வரப்படுகின்றன.
மணல்
எடுத்து வரும் லாரிகள், டாரஸ்கள் பல, நிர்ணயம் செய்யப்பட்ட அளவு மணல்களை
விட மிக அதிகமாக ஏற்றி வருவதுடன், அதிவேகமாக திருச்சி - கோவை மெயின்
ரோட்டில் பயணிக்கின்றன. குறிப்பாக, பல்லடம், பொள்ளாச்சி ரோடுகளில் மிக
வேகமாக பயணிக்கின்றன. மணல் லாரிகளின் அதிவேகத்தால், பல்லடம் பகுதியில் இரு
சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைந்துள்ளனர்.
நிர்ணயம் செய்துள்ள அளவை விட, கூடுதலாக மணல் ஏற்றிக்கொண்டும், அதிவேக
மாகவும் செல்லும் லாரிகளை போக்குவரத்து போலீசாரும், வருவாய்த்துறையினரும்
கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சில லாரிகள் கிழிந்த
தார்பாய்களால் மூடி வருவதால், ரோட்டில் சிதறுவதுடன், ரோட்டில் பயணிக்கும்
வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து, நிலைகுலையச் செய்கின்றன. இந்த
லாரிகளையும் கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.