/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/போராட்டக்குழுவினர் வாபஸ் பெற்றும் உண்ணாவிரதத்தை தொடரும் பொதுமக்கள்போராட்டக்குழுவினர் வாபஸ் பெற்றும் உண்ணாவிரதத்தை தொடரும் பொதுமக்கள்
போராட்டக்குழுவினர் வாபஸ் பெற்றும் உண்ணாவிரதத்தை தொடரும் பொதுமக்கள்
போராட்டக்குழுவினர் வாபஸ் பெற்றும் உண்ணாவிரதத்தை தொடரும் பொதுமக்கள்
போராட்டக்குழுவினர் வாபஸ் பெற்றும் உண்ணாவிரதத்தை தொடரும் பொதுமக்கள்
ADDED : செப் 22, 2011 12:03 AM
வள்ளியூர் : கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி நேற்று 11வது
நாளாக இடிந்தகரையில் உண்ணாவிதர போராட்டம் நடந்தது.
சென்னையில் போராட்டக்
குழுவினருடன் தமிழக முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தையில் நேற்று சுமூக
தீர்வு ஏற்பட்டும் போராட்டக் குழுவினர் போராட்டத்தை வாபஸ் பெற்ற போதிலும்
பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கடந்த 11ம் தேதி
இடிந்தகரையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் 127 பேர்
சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இப்போராட்டத்திற்கு
கூடன்குளம், இடிந்தகரை மற்றும் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த
பல்லாயிரக்கணக்கானோர் தினமும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடற்கரை கிராம மீனவர்கள் 11 நாட்களாக
கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் பள்ளிகளுக்கும் குழந்தைகளை
பெற்றோர்கள் அனுப்பாமல் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கூடன்குளம் மற்றும் சுற்று கிராம பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கடையடைப்பு
போராட்டமும் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு
தெரிவித்து மதிமுக பொது செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த்,
வணிகர்கள் பேரவை சங்க தலைவர் வெள்ளையன், பாமக தலைவர் ஜி.கே.மணி, சமூக
சேவகர் மேதாபட்கர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக அமைப்பினரும்
கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத பந்தலில் பேசினர். இந்நிலையில்
தமிழக அமைச்சர் செந்தூர்பாண்டியன், சண்முகநாதன், செல்லபாண்டியன் மற்றும்
மாவட்ட நிர்வாகத்தினர் போராட்டக் குழுவினருடன் ராதாபுரம் தாலுகா
அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு
ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் கூடன்குளம்
அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது. எனவே போராட்டத்தில் ஈடுபடுவோர்கள்
போராட்டத்தை கைவிடவேண்டும் என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த
அறிக்கை போராட்டக்காரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி போராட்டத்தை
தீவிரமடைய செய்தது. இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் மட்டுமின்றி
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும்
கடும் எதிர்ப்பு கிளம்பி ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத
போராட்டம், கடையடைப்பு போராட்டம் என்று நடந்து வந்தது. போராட்டத்திற்கு
தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வரும் நிலையில் கூடன்குளம் அணுமின் நிலைய
பிரச்னைக்கு சுமூக திர்வு காணும் வகையில் கூடன்குளம் அணுமின் நிலையம்
அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெ.,
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பினார். இதனை தொடர்ந்து பிரதமர்
தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மத்திய அமைச்சர் நாராயணசாமியை
தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதாகவும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முதல்வர்
நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டுக் கொண்டார். அதன்படி மத்திய அமைச்சர்
நாராயணசாமி சென்னைக்கு வருகை தந்து தமிழக தலைமை செயலாளர் மற்றும் அணுமின்
கழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின் போராட்டம் நடக்கும்
இடிந்தகரை கிராமத்திற்கு வந்து போராட்டக்காரர்களை சந்தித்தார். அப்போது
போராட்டக்குழு சார்பில் கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என
கோரிக்கை மனுவை மத்திய அமைச்சரிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட
மத்திய அமைச்சர், 'மக்களின் மன உணர்வுகளை தமிழக முதல்வரிடம் கூறி அவர்
கூறும் கருத்துகளை பிரதமரிடம் தெரிவிப்பேன், அதன்பின் பிரதமர் இறுதி முடிவு
எடுப்பார்' என்று கூறிவிட்டு நேற்று தமிழக முதல்வரை சந்தித்து விட்டு
டில்லிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் போராட்டக்குழு சார்பில் 10 பேர்
கொண்ட குழு அமைத்து தமிழக முதல்வரை சந்திக்க அரசு சார்பில் ஏற்பாடு
செய்யப்பட்டது. அதன்படி போராட்டக்காரர்கள் சார்பில் அந்த குழுவில்
போராட்டக்குழு அமைப்பாளர் உதயகுமார், மறைமாவட்ட ஆயர்கள் தூத்துக்குடி இவான்
அம்புரோஸ், கோட்டார் பீட்டர் ரெமிஜூஸ், கன்னியாகுமரி லியோன் கென்சன்,
சுவாமிதோப்பை சேர்ந்த பாலபிரஜாபதி அடிகளார், இடிந்தகரை பங்குதந்தை
ஜெயக்குமார், அருள்தந்தை செல்வராஜ், கடலோர மக்கள் கூட்டமைப்பு புஷ்பராயன்,
மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சிவசுப்பிரமணியன்,
கன்னியாகுமரி மாவட்ட மகளிர் குழுவை சேர்ந்த லிட்வின் ஆகிய 10 பேரும் 3
கார்களில் சென்னைக்கு சென்றனர். அங்கு நேற்று காலையில் தமிழக முதல்வர்
தலைமையில் நடந்த சமரச கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது போராட்டக்
குழுவினர் கூடன்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடிவிட்டு மாற்று
வழியில் மின் உற்பத்தி செய்ய மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும்
என்றும், கூடன்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூட அமைச்சரவையில்
தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்
என்றும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நாளை (இன்று) அமைச்சரவை கூடி முடிவு
செய்வதாக தமிழக முதல்வர் ஜெ., உறுதியளித்துள்ளார். அதன்படி போராட்டக்குழு
அமைப்பாளர் உதயகுமார் முதல்வரின் உறுதிமொழியை ஏற்று வாபஸ் பெறுவதாக
அறிவித்தார். மேலும் நாளை (இன்று) இடிந்தகரைக்கு சென்று உண்ணாவிரதம்
இருந்தவர்களிடமும், பொதுமக்களிடமும் நடந்தவைகளை கூறி முறைப்படி உண்ணாவிரத
போராட்டத்தை முடித்து வைப்போம் என்று கூறினார். நேற்று 11வது நாளாக நடந்த
உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்
திருமாவளவன் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தவர்களை சந்தித்து பேசினார்.
நேற்று 11வது நாளாக நடந்த போராட்டத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து
கொண்டனர். சென்னையில் முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு
ஏற்பட்டதால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தாலும்
போராட்டக் குழுவினர் நேரடியாக உண்ணாவிரத பந்தலுக்கு வந்து முதல்வருடன்
பேச்சுவார்த்தை கூட்டத்தில் நடந்த கருத்துகளை கூறி எல்லோருக்கும் முழு
திருப்தி ஏற்பட்டால்தான் உண்ணாவிரதத்தை முடிப்போம் என்று சாகும்வரை
உண்ணாவிரம் இருந்தவர்களும், பொதுமக்களும் கூறி தொடர்ந்து உண்ணாவிரதம்
இருந்து வருகின்றனர். இன்று 12வது நாளாக உண்ணாவிரதம் தொடரும்,
போராட்டக்குழு வந்து சொன்னபிறகுதான் முடிவு வரும் என்று பொதுமக்கள் கூறி
வருகின்றனர்.