வன்முறையை ஏவிவிடும் சிரியா அரசை எதிர்த்து மாகாண அரசின் அட்டர்னி ஜெனரல் ராஜினாமா
வன்முறையை ஏவிவிடும் சிரியா அரசை எதிர்த்து மாகாண அரசின் அட்டர்னி ஜெனரல் ராஜினாமா
வன்முறையை ஏவிவிடும் சிரியா அரசை எதிர்த்து மாகாண அரசின் அட்டர்னி ஜெனரல் ராஜினாமா
டமாஸ்கஸ் : சிரியா அரசு தனது மக்கள் மீது கட்டற்ற வன்முறைகளை ஏவிவிடுவதால், அந்நாட்டின் ஹமா மாகாண அரசு முதன்மை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்), தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில், ஹமா மாகாண அரசு முதன்மை வழக்கறிஞர், அட்னன் பக்கூர், பதவி விலகுவதாக அறிவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர், அப்பாவி மக்களை கொடூரமான முறையில் ராணுவம் கொலை செய்வது, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வது போன்ற அரசு வன்முறைச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் தான் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
'யூ டியூப்'பில் வெளியான அந்த வீடியோவில் பேசும் பக்கூர், கடந்த ஜூலை 31ம் தேதி ஹமா மத்தியச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் 72 பேரைக் கொன்றது, கொல்லப்பட்ட 420 அப்பாவி மக்களின் சடலங்கள், பொதுப் பூங்காக்களில் ராணுவ வீரர்களால் புதைக்கப்பட்டது, கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட கைது சம்பவங்களால் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது, சிறைகளில் நடக்கும் சித்திரவதைகளுக்கு 320 பேர் பலியானது, ஹமா மற்றும் அல் ஹாடிமா மாவட்டங்களில் வீடுகளில் மக்கள் இருக்கும் போதே அந்த வீடுகள் ராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்டது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சிரியா அரசு மீது கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களை விரைவில் வெளிப்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ குறித்து, சிரியா அரசு செய்தி நிறுவனமான 'சனா' வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,'பக்கூர், அவரது மெய்க்காவலர், கார் டிரைவர் என மூவர், ஆயுதக் கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர்' என தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதகாலமாக சிரியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சிக்கிடையில் இதுவரை அந்நாட்டு அரசில் ஒரு பிளவு கூட ஏற்படவில்லை. பக்கூரின் பதவி விலகல்தான் முதல் பிளவு. அவரது வீடியோ உண்மைதான் என்ற பட்சத்தில், இது சிரியா அரசு வட்டாரங்களில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.