
மதுரை: 'ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ்' அறிவிப்பை தொடர்ந்து ஆக., 18 முதல் தென் மாநில லாரிகள் வேலை நிறுத்தம் தொடர உள்ளது. இதனால் பார்சல் புக்கிங் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது தொடர்பாக மதுரை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சாத்தையா, செயலாளர் சாகுல் ஹமீது கூறியுள்ளதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 'டோல்கேட்' கட்டணத்தை முறைப்படுத்தல், டீசல் கட்டணத்தை குறைத்தல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளன.
நேற்று முதல் டில்லி, கோல்கட்டா, மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆக., 18க்கு முன்னரே மதுரையில் உள்ள 300 பார்சல் அலுவலகங்களிலும் புக்கிங்கை நிறுத்தி மூட உள்ளோம். இதனால் தினமும் சில்லரை மற்றும் மொத்த வணிகம் சுமார் 5 கோடி ரூபாய் வணிகம் பாதிப்பிற்குள்ளாகும். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர்.